இந்தியாவுக்கு தான் AI தொழில்நுட்பம் சிக்கல்.. ஆனால் ஆஸ்திரேலியாவில் அதுவே ஒரு வரப்பிரசாதம்.. என்ன காரணம்?




இந்தியா மற்றும் சீனா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில், AI தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பொதுமக்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடுமோ என்ற அச்சம் எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகை குறைவாக உள்ள ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், AI தொழில்நுட்பம் என்பது ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. அங்கு AI தொழில்நுட்பமானது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் கருவியாக பார்க்கப்படாமல், ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் ஒரு வழியாகவே பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலியாவின் நிபுணர்கள் பற்றாக்குறை


உலகளவில் தொழில்நுட்ப துறையில் பல்வேறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்த போதிலும், ஆஸ்திரேலியாவில் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்களின் பற்றாக்குறை இன்னும் குறையாமல் அப்படியே நீடிக்கிறது. சுமார் 54 சதவீத சிஇஓ-க்கள் தங்களின் நிறுவனங்களில் திறமையான ஊழியர்கள் இல்லை என்பதை பெரும் கவலையாகக்குறிப்பிடுகின்றனர். இந்த சூழலில், உயர்தரப் பணிகளில் உள்ள நிபுணர்களின் பணிச்சுமையை குறைக்க AI தொழில்நுட்பம் அங்கு ஒரு தீர்வாக கருதப்படுகிறது.


பணிச்சுமையைக் குறைக்கும் AI


தகவல் தேடல், நிறுவனத்தின் உள்நாட்டு ஆதரவு மற்றும் வழக்கமான பகுப்பாய்வு கோரிக்கைகள் போன்ற மீண்டும் மீண்டும் செய்யப்படும் ஒரே மாதிரியான வேலைகளை AIயிடம் ஒப்படைக்கும்போது, நிபுணர்களின் பொன்னான வேலை நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிபுணர்கள் தங்களின் திறமையை மிகவும் முக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளில் செலுத்த முடிகிறது என ஆஸ்திரேலிய தொழிலதிபர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


நிபுணர்களின் தேவை அதிகரிப்பு


அதே சமயம், கோடிங் உதவியாளர்கள் போன்ற AI கருவிகள் நிபுணர்களின் இடத்தை முழுமையாக பூர்த்தி செய்வதில்லை. மாறாக, அவை நிபுணர்களுடன் இணைந்தே செயல்படுகின்றன. இத்தகைய சூழலில், AI உருவாக்கும் முடிவுகள் மற்றும் தரவுகளை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு நிபுணர்களுக்கே உள்ளது. இதனால், AI பயன்பாடு அதிகரிப்பது ஊழியர்களின் தேவையை ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை குறைத்துவிடாமல், அவர்களின் கண்காணிப்பு பணியை அதிகரிக்கவே செய்கிறது.


பொருளாதாரப் பலன்கள் மற்றும் வெற்றிக் கணிப்பு


நிபுணர்களைப் பணியமர்த்தும் அதிகப்படியான செலவை குறைத்து, பணிகளை முடிக்கும் வேகத்தை AI அதிகரிக்கிறதா என்பதை கொண்டே ஒரு நிறுவனத்தின் வெற்றி கணிக்கப்படுகிறது. இத்தகைய வேகமும் துல்லியமும் ஒரு நிறுவனத்திற்கு நீண்டகால பொருளாதாரப் பலன்களை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


நாடுகளுக்கு இடையிலான பார்வை வேறுபாடு


சுருக்கமாக சொன்னால், மனித வள பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு AI தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து, பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. ஆனால், இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில், உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய வகை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தொழில்நுட்பம் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த அச்சத்தையும் தேவையையும் சமன் செய்வதே வளரும் நாடுகளின் சவாலாக உள்ளது.


Tabnine AI: மத்த டூல்ஸ் எல்லாம் கோடிங் எழுதும்… ஆனா Tabnine மட்டும்தான் உங்க கம்பெனி கோடிங்க ‘படிச்சு’ எழுதும்! இது வெறும் AI இல்ல, உங்க டீம்ல ஒரு புத்திசாலி மெம்பர்!”