இன்றைய நவீன உலகில் AI அனைத்து துறைகளிலும் ஊடுருவி வருகிறது. அந்த வகையில், ஓவியம் வரைய தெரியாதவர்கள் கூட ஒரு தேர்ந்த கலைஞரை போல வரைய உதவும் ஒரு அற்புதமான கருவிதான் AutoDraw. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஏஐ கருவி, நாம் கிறுக்கும் கோடுகளை புரிந்து கொண்டு, அவற்றை அழகான சித்திரங்களாக மாற்றுகிறது. குறிப்பாக கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
எப்படி செயல்படுகிறது இந்த ஏஐ மேஜிக்?
AutoDraw AI என்பது Machine Learning தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. நீங்கள் இந்த இணையதளத்திற்கு சென்று, ஒரு வீட்டையோ அல்லது ஒரு மிதிவண்டியையோ அரைகுறையாக வரைந்தால் போதும். திரையின் மேற்புறத்தில் “Do you mean?” என்ற பகுதியில், நீங்கள் வரைய நினைத்த படத்திற்கு இணையான பல அழகான வடிவமைப்புகளை AutoDraw AI பரிந்துரைக்கும். அதில் உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை தேர்ந்தெடுத்தால், உங்கள் சாதாரண வரைபடம் ஒரு நொடியில் அழகான டிஜிட்டல் ஓவியமாக மாறிவிடும்.
மாணவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கருவி
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டுரை எழுத சொல்லும்போதோ அல்லது ஒரு அறிவியல் வரைபடத்தை வரைய சொல்லும்போதோ, பல மாணவர்கள் “எனக்கு ஓவியம் வரைய தெரியாது” என்று தயங்குவார்கள். அத்தகைய மாணவர்களின் கற்பனை திறனை முடக்காமல், அவர்கள் நினைப்பதை வரைவதற்கு AutoDraw AI உதவுகிறது. உதாரணமாக, ஒரு மாணவர் ஒரு வட்டம் போட்டால், அது பந்து, கடிகாரம் அல்லது சைக்கிள் சக்கரம் என்பதை ஏஐ கண்டறிந்து காட்டும். இது மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதோடு, அவர்களின் தன்னம்பிக்கையையும் உயர்த்துகிறது.
ஆசிரியர்களுக்கான பயனுள்ள கற்பித்தல் கருவி
ஆசிரியர்கள் தங்கள் பாடங்களை கற்பிக்கும்போது, கரும்பலகையில் அல்லது டிஜிட்டல் திரையில் விரைவாக ஒரு விளக்கப்படம் வரைய வேண்டியிருக்கும். அப்போது ஆட்டோ டிராவை பயன்படுத்தி துல்லியமான படங்களை நொடிகளில் உருவாக்கலாம். வரலாறு, அறிவியல், ஆங்கிலம் என அனைத்து பாட ஆசிரியர்களும் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எளிமையாகவும், காட்சிரீதியாகவும் புரிய வைக்க முடியும்.
கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்பாடு
AutoDraw AIயில் வரைபடங்களை உருவாக்குவதுடன், அவற்றுக்கு பிடித்தமான நிறங்களை நிரப்பவும் , எழுத்துக்களைச் சேர்க்கவும் வசதிகள் உள்ளன. நீங்கள் உருவாக்கிய ஓவியங்களை ‘PNG’ கோப்பாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அதன் இணைப்பை பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதில் உள்ள “AutoDraw Assist” வசதியை அணைத்துவிட்டு, சாதாரண முறையில் சுயமாக வரையவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் வளர வளர, கற்றல் முறைகளும் எளிதாகி வருகின்றன. அந்த வரிசையில் AutoDraw AI போன்ற கருவிகள் கல்வியை ஒரு சுமையாக பார்க்காமல், ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக மாற்றுகின்றன. ஓவியம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை என்ற நிலையை மாற்றி, எல்லோரும் தங்கள் கற்பனையை திரையில் கொண்டு வர இந்த AutoDraw AI கருவி வழிவகை செய்கிறது.
