Flourish AI: இது டேட்டா உலகம்.. ஆனால் டேட்டாவை டேட்டாவா கொடுக்காமல் கதையா கொடுங்க.. அதுக்கு தான் நம்ம Flourish இருக்குதே..



பொதுவாக ஒரு சில புள்ளிவிவரங்கள் மற்றும் டேட்டாக்களை பத்தி பத்தியாக கொடுத்தால் படிப்பவர்களுக்கு எளிதில் சலிப்பு ஏற்பட்டுவிடும். ஆனால், அதையே ஒரு கதை போல வரைபடங்கள் மூலம் சொன்னால், அதை பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாக இருப்பதோடு எளிதில் புரியவும் செய்யும். அந்த வகையில் நம்முடைய முக்கியமான டேட்டாக்களை வண்ணமயமான வரைபடங்களாக மாற்றி, ஒரு கதை சொல்லும் பாணியில் வழங்க உதவும் அற்புதமான தளம் தான் Flourish என்ற AI டூல்.


Flourish தளம் டெக்னாலஜி உலகில் ஒரு ‘கேம் சேஞ்சர்’ என்று அழைக்கப்படுவதற்கு அதன் எளிமையே முக்கிய காரணம். இதற்கு எவ்வித கோடிங் அறிவும் தேவையில்லை. நீங்கள் ஒரு தொழில்நுட்ப நிபுணராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; வெறும் டேட்டாவை Import செய்தால் மட்டும் போதும். சில நிமிடங்களில் உலகத்தரம் வாய்ந்த விஷுவல் கிராபிக்ஸ்களை இது உருவாக்கி தரும். எண்களை கண்டு அஞ்சுபவர்களை கூட இது ஒரு சிறந்த ‘டேட்டா ஸ்டோரிடெல்லராக’ மாற்றும் வல்லமை கொண்டது.


இங்கு உருவாக்கப்படும் வரைபடங்கள் வெறும் Static படங்கள் அல்ல. உங்கள் பார்வையாளர்கள் வரைபடத்தின் மீது Cursorஐ கொண்டு சென்றால், கூடுதல் தகவல்களை அவர்களே தேடி அறியும் வகையில் இது Interactive தன்மையை கொண்டது. நீங்கள் உருவாக்கிய வரைபடங்களை இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பிரசன்டேஷன்களில் எளிதாக Embed செய்து இணைத்துக்கொள்ளலாம். இது மொபைல் மற்றும் கணினி என இரண்டிற்குமே தானாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் Responsive வசதி கொண்டது.


BBC போன்ற உலகப் புகழ்பெற்ற செய்தி நிறுவனங்கள் முதல் லண்டன் பங்குச்சந்தை வரை பல முன்னணி நிறுவனங்கள் இந்த புளோரிஷ் தளத்தை தங்களது அன்றாட பணிகளுக்குப் பயன்படுத்துகின்றன. சிக்கலான டேட்டாக்களை எளிய வரைபடங்களாக மாற்றவும், மாணவர்களுக்கு கடினமான பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில் காட்சிப்படுத்தவும் இது உதவுகிறது. குறிப்பாக மார்க்கெட்டிங் துறைகளில் நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டேட்டா ரிப்போர்ட்களைத் தயார் செய்ய இது ஒரு சிறந்த கருவியாகும்.


2018-ஆம் ஆண்டு டன்கன் கிளார்க் மற்றும் ராபின் ஹூஸ்டன் ஆகியோரால் தொடங்கப்பட்ட Flourish நிறுவனம், அதன் அசுர வளர்ச்சியால் 2022-ஆம் ஆண்டு பிரபல Canva நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. Data Storytelling முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இந்த நிறுவனத்திற்கு பெரும் பங்குண்டு. மற்ற கருவிகள் டேட்டாக்களை வெறும் ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலையில், Flourish அவற்றை ஒரு சுவாரசியமான கதையாக சொல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதன் Scrollytelling அம்சம் வாசகர்களுக்கு ஒரு அபாரமான அனுபவத்தை தருகிறது. வாசகர்கள் செய்தியை வாசிக்க வாசிக்க, அதற்கு ஏற்ப வரைபடங்களும் மாறும் விந்தை இதில் உண்டு. உங்களின் சாதாரண எக்செல் ஷீட் தரவுகளை ஒரு சினிமா போல காட்சிப்படுத்த வேண்டுமானால், அதற்கு Flourish தான் சரியான தேர்வு. தகவல்களை வெறும் எண்களாக பார்க்காமல், அவற்றை ஒரு கலைப்படைப்பாக மாற்றும் இந்த தொழில்நுட்பம் வருங்காலத்தின் மிக முக்கியமான தேவையாக இருக்கும்.


Julius AI : Python அல்லது SQLன்னு மண்டையை உடைச்சுக்காதீங்க… டேட்டாவை தூக்கி Julius AI கிட்ட போடுங்க, அது ரிப்போர்ட்டை தூக்கி உங்க கையில கொடுக்கும்..!