ஒரு புகைப்படத்தை மனிதன் பார்ப்பதற்கும் AI பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? எப்படி ஒரே நொடியில் புகைப்படத்தை AI எடிட் செய்கிறது?

 

AI tech11

மனிதனுக்கு ஆறறிவு இருப்பதால் ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் அதில் இருப்பது என்ன என்பதை எளிதாக கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால், AI என்பது ஒரு இயந்திர தொழில் நுட்பம் என்பதால், அந்த தொழில்நுட்பத்தால் எப்படி ஒரு புகைப்படத்தை அடையாளம் காண முடியும் என்பதும், அதன் பின் எப்படி அந்த புகைப்படத்தை எடிட் செய்கிறது என்பதும் பலருக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது. அடிப்படையில் மனித கண்களை போலன்றி, AI ஒரு புகைப்படத்தை நுணுக்கமான தரவுகளின் தொகுப்பாகவே அணுகுகிறது.


உதாரணமாக, ஒரு புகைப்படத்தை AIயிடம் கொடுத்தால், முதலில் அந்த புகைப்படத்தை AI தொழில்நுட்பம் எண்களாகவே பார்க்கிறது. புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு Pixel, அதன் நிறம் மற்றும் ஒளியை எண்களாக மாற்றி, Computer Vision என்ற முறை மூலம் ஆய்வு செய்கிறது. இந்த எண்களின் வரிசையை வைத்துத்தான் ஒரு படத்தின் அடிப்படை கட்டமைப்பை AI புரிந்துகொள்ள தொடங்குகிறது.


இதனை தொடர்ந்து, Neural Network எனப்படும் முறை அந்த படத்தில் உள்ள விளிம்புகள், வடிவங்கள் மற்றும் கோடுகளை முதலில் கண்டறியும். உதாரணமாக, ஒரு குரங்கின் புகைப்படம் என்றால் அதன் மூக்கு, கால், வால் போன்ற தனித்துவமான அம்சங்களை AI கூர்ந்து கவனிக்கும். ஏற்கனவே அதன் தரவுத்தளத்தில் உள்ள மில்லியன் கணக்கான குரங்குகளின் புகைப்படங்களோடு ஒப்பிட்டு பார்த்து, இது குரங்குதான் என்பதை 99% முதல் 100% வரை மிக துல்லியமாக உறுதி செய்துவிடும்.


புகைப்படத்தை அடையாளம் கண்டவுடன், அதனை Generative AI மூலம் எடிட் செய்யும் பணி தொடங்குகிறது. AI அந்தப் படத்தின் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்த பின்னர், அதன் எல்லைக்கோடுகளை மிக துல்லியமாக பிரித்தெடுக்கும். இதன் மூலம் ஒரே நொடியில் அந்த படத்தின் பின்னணியை மாற்றவோ அல்லது முழுமையாக நீக்கவோ அதனால் முடிகிறது. இது மனிதர்கள் மணிநேரக்கணக்கில் செய்யும் வேலையை சொற்ப நேரத்தில் முடித்துவிடுகிறது.


ஒரு குரங்கு இருக்கும் புகைப்படத்தில் தேவையில்லாத பகுதியை நீக்கினால், அந்த இடம் காலியாக இருக்கும் என்பதை AI தனது அறிவுத்திறன் மூலம் உணர்ந்து கொள்கிறது. உடனே அந்த இடத்திற்கு பொருத்தமான சூழலை அதுவாகவே நிரப்பிவிடும். அதாவது, குரங்குக்கு பின்னால் மரம், சுவர் அல்லது செடி என அந்த படத்தின் சூழலுக்கு தகுந்தாற்போல தானாகவே உருவாக்கி அதனை முழுமையடைய செய்யும். இது பார்ப்பதற்கு மிகவும் இயற்கையாக இருக்கும்.


ஒருவேளை அந்த புகைப்படம் மங்கலாக இருந்தால், அதன் விடுபட்ட பிக்சல்களை AI தானாகவே கணித்து அந்த புகைப்படத்தை தெளிவான படமாக மாற்றுகிறது. மொத்தத்தில் AI என்பது நாம் கொடுக்கும் புகைப்படத்தை முழுமையாக படித்து அறிந்து, அதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் புரிந்து கொண்டு மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்ட வேகத்தில் எடிட்டிங் வேலையை செய்கிறது. இந்த தொழில்நுட்பம் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையல்ல.


சிக்னல்ல நிக்கிறதுக்கு இது வெறும் சிகப்பு விளக்கு இல்ல… டேட்டாவை செக் பண்ணி டிராபிக்கை கிளியர் பண்ற AIயோட கணக்கு!