AI தொழில்நுட்பம் மனிதனின் கற்பனை திறனை விஞ்சும் வகையில் வளர்ந்து வருகிறது. ஒரு மனிதன் மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் செய்யும் கடினமான வேலைகளை, AI கருவிகள் ஒரு சில நொடிகள் அல்லது நிமிடங்களில் செய்து முடித்து விடுகின்றன. அந்த வகையில், வீடியோ எடிட்டிங் துறையில் AI தொழில்நுட்பம் செய்து வரும் அற்புதங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை எனும் அளவுக்கு மாயாஜாலமாக அமைந்துள்ளன. குறிப்பாக, எடிட்டிங் பணிகளை எளிமையாக்கி, நேரத்தை மிச்சப்படுத்துவதில் AI கருவிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
வீடியோ எடிட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்தும் Descript AI
வீடியோ எடிட்டிங் துறையில் முன்னணியில் இருக்கும் AI கருவிகளில் ஒன்று Descript ஆகும். இது ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்யவும், எடிட் செய்யவும் உதவும் ஒரு முழுமையான தளமாகும். குறிப்பாக பாட்காஸ்டர்கள், யூடியூபர்கள் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் நேர்த்தியான வீடியோக்களை உருவாக்குவதில் இது பெரும் உதவியாக இருக்கிறது. எடிட்டிங் பற்றிய ஆழமான அறிவு இல்லாதவர்கள் கூட இதன் மூலம் மிக எளிதாக வீடியோக்களை உருவாக்க முடியும்.
Descript கருவியின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் Text-based editing முறை ஆகும். நீங்கள் ஒரு வீடியோவை அப்லோட் செய்தவுடன், அதிலுள்ள பேச்சை Descript தானாகவே உரையாக மாற்றுகிறது. இப்போது நீங்கள் வீடியோவின் ‘டைம்லைனை’ தேட வேண்டிய அவசியமில்லை; அந்த உரையில் உள்ள ஒரு வார்த்தையை நீங்கள் நீக்கினால், வீடியோவில் அந்த பகுதி தானாகவே நீக்கப்பட்டுவிடும். ஒரு வேர்ட் டாக்குமெண்ட்டை திருத்துவது போன்றே வீடியோவை எடிட் செய்வது இதன் தனிச்சிறப்பாகும்.
இந்த கருவியின் எடிட்டிங் வேகம் அசுரத்தனமானது. நீங்கள் பேசும்போது இடையில் வரும் ‘ம்ம்…’, ‘ஆ…’ போன்ற தேவையற்ற சொற்களை இது அடையாளம் கண்டு, ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்தமாக நீக்கிவிடும். மேலும், மொபைலில் பதிவு செய்யப்பட்ட இரைச்சல் நிறைந்த அல்லது Echo கொண்ட ஆடியோவை கூட, ஒரு புரொபஷனல் ஸ்டுடியோவில் பதிவு செய்தது போல தெளிவாக மாற்றக்கூடிய ‘ஸ்டுடியோ சவுண்ட்’ வசதி இதில் உள்ளது.
மற்றொரு ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், வீடியோவில் நீங்கள் ஒரு வார்த்தையை தவறாகப் பேசிவிட்டால், அதை மீண்டும் ஒலிப்பதிவு செய்ய தேவையில்லை. Overdub என்ற வசதி மூலம் உங்கள் சொந்த குரலிலேயே அந்த தவறான வார்த்தையை AI மூலம் மாற்றியமைக்கலாம். அதேபோல், கேமரா முன் நிற்க தயங்குபவர்கள் டிஸ்கிரிப்ட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசக்கூடிய AI அவதார்களை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.
எளிமையான மற்றும் வேகமான எடிட்டிங் தேவைப்படுபவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சினிமா தரத்திலான VFX, கலர் கிரேடிங் மற்றும் சிக்கலான கிராபிக்ஸ் வேலைகள் செய்பவர்களுக்கு இது போதுமானதாக இருக்காது. டிஸ்கிரிப்ட் தளத்தில் மூன்று மணிநேர டிரான்ஸ்கிரிப்ஷன் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் வசதிகளை பெற விரும்புவோர் மாதத்திற்கு சுமார் 1,000 ரூபாய் முதல் தொடங்கும் கட்டண திட்டங்களில் இணைந்து கொள்ளலாம்.
