OpenAI நிறுவனம் தற்போது நுகர்வோர் பொருட்கள் வியாபாரத்தில் காலடி எடுக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு ஏஐ கருவிகளை உருவாக்கி தொழில்நுட்ப உலகில் புரட்சிகளை ஏற்படுத்தி வரும் OpenAI இப்போது நுகர்வோர் ஹார்ட்வேர் சந்தையிலும் தன்னை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. அதன் முதல் தயாரிப்பாக ஏஐ சார்ந்த இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இயர்பட்ஸ் முழுமையான தனி ஏஐ சாதனமாக இல்லாமல், பொதுவான நுகர்வோர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளியாகி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனை மற்றும் விநியோகம் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறைந்த செலவில், எளிமையான பயன்பாட்டை கருத்தில் கொண்டு இந்த தயாரிப்பு உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய ஹார்ட்வேர் தயாரிப்பை உருவாக்குவதற்காக, ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் டிசைன் தலைமை அதிகாரியான ஜோனி ஐவ் உடன் OpenAI இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வடிவமைப்பில் எளிமை மற்றும் அழகை முதன்மைப்படுத்தி இந்த இயர்பட்ஸ் உருவாக்கப்படுவதாகவும், தற்போதைய வடிவமைப்பு திசை இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
OpenAI உருவாக்கும் இந்த இயர்பட்ஸ் பெரும்பாலும் குரல்வழி மூலமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைகளை பயன்படுத்தாமல் பேசும் வசதி, பயணத்தின் போது real-time உதவி, குரல் கட்டளைகள் மூலம் தகவல் மற்றும் ஆலோசனைகளை பெறும் வசதி போன்ற அம்சங்கள் இதில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பயனர்களுக்கு எளிதான மற்றும் வசதியான ஏஐ அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும்.
மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்படும் இந்த ஏஐ இயர்பட்ஸ் சந்தைக்கு வந்தால், நுகர்வோர் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்றும், நுகர்வோர் ஹார்ட்வேர் சந்தையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தினசரி வாழ்க்கையில் ஏஐ உதவியை எளிதாக பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு முக்கிய சாதனமாக மாறலாம்.
இந்த இயர்பட்ஸ் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் போன்று தனித்து செயல்படும் சாதனமாக இல்லாவிட்டாலும், அவைகளுடன் இணைந்து சூழ்நிலையை புரிந்து கொண்டு உதவும் ஒரு புத்திசாலி ஏஐ உதவியாளராக செயல்படும் என கூறப்படுகிறது. இதுவரை இந்த தயாரிப்பு குறித்து OpenAI நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்களை நிறுவனம் மறுப்பு தெரிவிக்காததும் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
