இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ‘இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026’ சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, நேற்று Google DeepMind தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகம் தற்போது ஒரு மிக முக்கியமான தொடக்கப் புள்ளியில் இருப்பதாகவும், அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளுக்குள் செயற்கை பொது நுண்ணறிவு அதாவது AGI என்பது முழுமையாக சாத்தியமாகும் என்றும் தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
‘ஜக்டு’ தொழில்நுட்பமும் AGI வருகையும்
தற்போதைய AI கருவிகள் சில வேலைகளில் அபாரமான திறமையை காட்டினாலும், சில அடிப்படை விஷயங்களில் இன்னும் பின்தங்கியே உள்ளன. இதை Jagged தொழில்நுட்பம் என வர்ணித்த ஹசாபிஸ், Gemini போன்ற அடிப்படை மாடல்களுடன் திட்டமிடுதல் மற்றும் பகுத்தறியும் திறனை கொண்ட ‘ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் லேர்னிங்’ இணையும் போதுதான் உண்மையான AGI உருவாகும் என விளக்கினார். இது மனித சிந்தனைக்கு இணையான நிலைத்தன்மையை வழங்கும்.
இரட்டை அபாயங்கள் குறித்த எச்சரிக்கை
AI தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியை கொண்டாடும் அதே வேளையில், அதன் இருபக்க தன்மை குறித்தும் அவர் எச்சரித்தார். இந்த தொழில்நுட்பத்தை தவறான மனிதர்கள் அல்லது நாடுகள் தீய நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தடுக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். குறிப்பாக, சைபர் பாதுகாப்பு மற்றும் உயிரியல் ரீதியான ஆபத்துகள் குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.
அறிவியலின் புதிய மறுமலர்ச்சி
AI என்பது வெறும் சாட்போட்கள் அல்லது அலுவலக வேலைகளை எளிதாக்கும் கருவி மட்டுமல்ல; அது அறிவியலின் புதிய மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று ஹசாபிஸ் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் நாம் கற்பனை செய்ய முடியாத அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும், இது மனித குலத்தின் அறிவு தேடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரோபாட்டிக்ஸ் மற்றும் எதிர்காலக் கணிப்பு
ரோபாட்டிக்ஸ் துறையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய ‘பிரேக்அவுட்’ மாற்றங்கள் வரும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். ஜெமினி போன்ற AI மாடல்கள் Robots உடன் இணையும் போது, அவை நிஜ உலகில் மனிதர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பப் பாய்ச்சல் ரோபாட்டிக்ஸ் துறையின் முகத்தையே மாற்றப்போகிறது என்பது அவரது உறுதியான கணிப்பாக உள்ளது.
இந்தியாவிற்கான முக்கிய அழைப்பு
இறுதியாக, இந்தியா குறித்து பேசிய ஹசாபிஸ், “இந்தியா AI கருவிகளை பயன்படுத்தும் நுகர்வோராக மட்டும் இல்லாமல், அவற்றை உருவாக்கும் படைப்பாளர்களாக மாற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கான திறமையும் வாய்ப்பும் இந்திய இளைஞர்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மொத்தத்தில், இந்தியாவில் நடைபெறும் இந்த AI மாநாடு உலக தொழில்நுட்ப வரைபடத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
