செயற்கை நுண்ணறிவு உலகையே தனது மாயாஜாலத்தால் கட்டிப்போட்டு வரும் நிலையில், இப்போது ஒரு படி மேலே போய் இயற்கையோடு கைகோர்த்துள்ளது. மனிதர்கள் மனிதர்களோடு மட்டுமே உரையாடிய காலம் மறைந்து, இப்போது நாம் வளர்க்கும் செடி, கொடிகளுடனும் ‘அரட்டை’ அடிக்கும் காலம் பிறந்துவிட்டது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா, நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு ‘பேசும் தாவரங்களை’ அறிமுகப்படுத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் அங்கிருக்கும் தாவரங்களுடன் நேரடியாகப் பேசி, அவற்றிடம் இருந்து சுவாரஸ்யமான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு தனித்துவமான பெயரும், சுவாரஸ்யமான குணாதிசயங்களும் சூட்டப்பட்டுள்ளன. உதாரணமாக, வெப்பமண்டல பகுதியில் வளரும் கொடி வகைகளுக்குத் துடிப்பான மற்றும் நகைச்சுவையான சுபாவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘டைட்டஸ் ஜூனியர்’, ‘டைட்டன் ஆரம்’ போன்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த தாவரங்களிடம், பார்வையாளர்கள் நேரடியாக குரல் வழியாகவோ அல்லது மொபைல் போனில் குறுஞ்செய்தி மூலமாகவோ தங்களது உரையாடலை தொடங்கலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அந்த தாவரமே பதில் அளிப்பது போன்ற உணர்வை இந்த AI தொழில்நுட்பம் வழங்குகிறது.
இந்த மாயாஜாலத்தின் பின்னணியில் பிரம்மாண்டமான ‘டேட்டா’ மற்றும் AI அல்காரிதம்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தாவரத்தின் அறிவியல் பெயர்கள், அதன் பூர்வீகம், வளரும் விதம் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் போன்ற அனைத்து தகவல்களும் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. நாம் ஒரு கேள்வியை கேட்டால், அந்த தாவரத்தின் குணத்திற்கு ஏற்ப, மிகவும் இயல்பான மொழியில் பதில்கள் உடனடியாக கிடைக்கும். இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நவீனக் கல்வி அனுபவமாகவும் மாறியுள்ளது.
இத்திட்டத்தின் பின்னணி குறித்து பேராசிரியர் சாம் ப்ரோக்கிங்டன் கூறுகையில், மாணவர்களிடையே இயற்கையை பற்றிய தேடலையும், ஆர்வத்தையும் தூண்டுவதே இதன் முதன்மை நோக்கம் என்றார். இளைய தலைமுறைக்கு தாவரங்கள் குறித்த அறிவை சலிப்பில்லாத முறையில் கொண்டு சேர்க்க AI ஒரு பாலமாக செயல்படுகிறது. மௌனமான காட்சி பொருட்களாக இருந்த செடிகள், இப்போது அறிவார்ந்த நண்பர்களாக மாறி தங்களை பற்றிய சிறப்புகளை தாங்களே விவரிப்பது பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தருகிறது.
அறிவியலும் இயற்கையும் சங்கமிக்கும் இந்த அற்புதமான முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் தாவரங்கள் என்பவை வெறும் அழகுக்காக வளர்க்கப்படுபவை மட்டுமல்ல, அவை நம்மிடம் பேசும் உற்ற நண்பர்களாகவும் உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இந்த ‘பேசும் தாவரங்கள்’ கண்காட்சி, இயற்கையை நேசிக்கும் எவருக்கும் ஒரு மறக்க முடியாத ‘டிஜிட்டல்’ அனுபவமாக அமையும்.
