Google Maps in AI: அட்ரஸ் இல்லாத தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்.. இது ரஜினி பாடல்.. அட்ரஸ் இல்லாத தெருவை கூட கூகுள் மேப்ஸ் அறிவான்.. இது AIன் மாயாஜாலம்..!


Google Maps


கூகுள் மேப்ஸ் என்பது இன்று வெறும் வழிகாட்டும் கருவி மட்டுமல்ல, “அட்ரஸ் இல்லாத தெருவை கூட ஆட்டோக்காரன் அறிவான்” என்ற சினிமா பாடலை போல, உலகின் எந்த மூலையையும் நமக்கு துல்லியமாக காட்டும் ஒரு டிஜிட்டல் வழிகாட்டியாக மாறிவிட்டது. தற்போது கூகுள் நிறுவனம் தனது அதிநவீன Gemini AI தொழில்நுட்பத்தை மேப்ஸுடன் ஒருங்கிணைத்துள்ளதால், இது முன்னெப்போதும் இல்லாத வகையில் பல ஆச்சரியத்தக்க முடிவுகளை வழங்குகிறது. சாதாரண வரைபடமாக இருந்த கூகுள் மேப்ஸ், இப்போது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நமக்கு பிடித்தமான இடங்களை சுயமாக பரிந்துரைக்கும் ஒரு நெருங்கிய நண்பனை போல உருவெடுத்துள்ளது.


இப்போது நீங்கள் கூகுள் மேப்ஸிடம் ஒரு நண்பரிடம் பேசுவதை போலவே உரையாடலாம். உதாரணமாக, “சென்னையில் நிம்மதியாக படம் பார்க்க எந்த தியேட்டர் சரியானது?” என்று கேட்டால், அது உடனடியாக திரையரங்குகளை ஆய்வு செய்து சிறந்த இடத்தை பரிந்துரைக்கும். அதேபோல், “எனது காதலியுடன் அமைதியாக மதிய உணவு சாப்பிட எந்த ஹோட்டல் சிறந்தது?” என்று நீங்கள் கேட்டால், உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு அமைதியான சூழல் கொண்ட உணவகங்களை இது பட்டியலிடும். இது வெறும் தேடல் முடிவுகளை மட்டும் தராமல், மக்களின் விமர்சனங்களை ஆய்வு செய்து புத்திசாலித்தனமாக பதில் அளிப்பது குறிப்பிடத்தக்கது.


கூகுள் மேப்ஸ் இப்போது கோடிக்கணக்கான புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஒன்றிணைத்து, ஒரு இடத்தின் 3D காட்சியை உருவாக்குகிறது. இதன் மூலம், நீங்கள் ஒரு ஹோட்டலுக்கு செல்லும் முன்பே அதன் உட்புறம் எப்படி இருக்கும் என்பதை உங்கள் மொபைலிலேயே பார்க்கலாம். அதுமட்டுமின்றி, நீங்கள் செல்லும் நேரத்தில் அங்குள்ள வானிலை எப்படி இருக்கும், போக்குவரத்து நெரிசல் எந்த அளவில் இருக்கும் என்பதையும் டிஜிட்டல் முறையில் முன்கூட்டியே கூகுள் மேப்ஸ் கணித்து கூறும் வசதி இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.


பாதுகாப்பு அம்சத்திலும் கூகுள் மேப்ஸ் தற்போது பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, சாலைகளில் நடைபெறும் கட்டுமான பணிகள் மற்றும் விபத்துக்கள் குறித்து இது உடனுக்குடன் எச்சரிக்கிறது. குறிப்பாக, விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளை நீங்கள் நெருங்கும்போது ஏஐ உங்களை எச்சரிப்பதோடு, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாற்று பாதையையும் தானாகவே பரிந்துரைக்கும். இது பயண நேரத்தை குறைப்பதோடு, பாதுகாப்பான பயணத்திற்கும் வழிவகுக்கிறது.


உங்கள் மொபைல் கேமராவை பயன்படுத்தி ஒரு கட்டிடம் அல்லது உணவகத்தை தேடும் வசதியும் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. கேமராவை அந்த இடத்தின் பக்கம் திருப்பினால் போதும், அந்த உணவகத்தில் எது ஸ்பெஷல், அதன் மெனு கார்டு, உணவுகளின் விலை மற்றும் பொதுமக்களின் ரேட்டிங் என அனைத்து விவரங்களையும் ஏஐ உங்கள் திரையில் புட்டு புட்டு வைக்கும். அதேபோல், சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பல அடுக்கு மேம்பாலங்களில் செல்லும்போது, எந்த பாதையில் திரும்ப வேண்டும் என்பதில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் குழப்பத்தை ஏஐ துல்லியமாக தீர்த்து வைக்கிறது.


வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, நடந்து செல்பவர்களுக்கும் சைக்கிளில் செல்பவர்களுக்கும் ஜெமினி ஏஐ ஒரு சிறந்த துணையாக மாறியுள்ளது. நீங்கள் நடந்து செல்லும்போது அருகில் ஏடிஎம், வங்கி அல்லது கொரியர் அலுவலகம் எங்குள்ளது என்று கேட்டால், உங்கள் கைகளை பயன்படுத்தாமலேயே குரல் வழியாகவே அது பதிலளிக்கும். அந்த வகையில், கூகுள் மேப்ஸ் மற்றும் ஜெமினி ஏஐ கூட்டணியில் உருவாகியுள்ள இந்த ஆச்சரியமான வசதிகளை நீங்களும் பயன்படுத்தி பார்த்து, உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


திருடுறவன் ஒரு ஸ்டெப் முன்னாடி போனா… தடுக்குற AI பத்து ஸ்டெப் முன்னாடி நிக்கும்! வங்கி மோசடிகளை தடுக்கும் AI அல்காரிதம்கள்..!