கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசு AI தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூட, AI வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 16 முதல் 20-ஆம் தேதி வரை இந்தியாவில் சர்வதேச AI உச்சிமாநாடு நடைபெற உள்ளது. உலகளாவிய விவாதங்களை நெறிப்படுத்தவும், AI தொழில்நுட்பத்தை முறைப்படுத்தவும் ‘ஏழு சக்கரங்கள்’ என்ற புதிய கொள்கை வரைபடத்தை இந்தியா வெளியிட்டுள்ளது.
மனித மூலதனம் மற்றும் சமூக உள்ளடக்கம்
இந்த உச்சிமாநாட்டின் முதல் சக்கரம் ‘மனித மூலதனம்’ ஆகும். இது AI சார்ந்த புதிய வேலைவாய்ப்பு சூழலுக்கு மக்களை தயார் செய்வதையும், சமமான திறன் மேம்பாட்டை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இரண்டாவது சக்கரமான ‘சமூக மேம்பாட்டிற்கான உள்ளடக்கம்’. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய AI அமைப்புகளை உருவாக்குவதை வலியுறுத்துகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை இது உறுதி செய்யும்.
பாதுகாப்பு மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள்
மூன்றாவது சக்கரம் ‘பாதுகாப்பான மற்றும் நம்பகமான AI என்பதை மையமாக கொண்டுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் அடிப்படையில் உலகளாவிய AI தரநிலைகளை உருவாக்க இது முன்னுரிமை அளிக்கிறது. நான்காவது சக்கரமான ‘அறிவியல், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல் ஆராய்ச்சிகளை விரைவுபடுத்துவதையும், உலகளாவிய அளவில் அறிவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் குறிக்கிறது. இது சிக்கலான அறிவியல் சவால்களுக்கு ஏஐ மூலம் தீர்வுகாண வழிவகுக்கும்.
நிலையான வளர்ச்சி மற்றும் வளங்களை ஜனநாயகப்படுத்துதல்
ஐந்தாவது சக்கரம் ‘மீள்தன்மை மற்றும் செயல்திறன்’ சார்ந்தது. இது ஆற்றல் திறன் கொண்ட AI தொழில்நுட்பங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஆறாவது சக்கரமான ‘வளங்களை ஜனநாயகப்படுத்துதல்’, AI கருவிகள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகளை ஒரு சில நிறுவனங்களிடம் மட்டும் முடங்காமல், அனைவருக்கும் சமமாகக் கிடைக்க செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் அடிப்படைத் தூண்கள்
ஏழாவது சக்கரம் ‘பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலன்’ என்பதாகும். நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், சமூக வளர்ச்சியை தூண்டவும் AI பயன்படுத்துவதை இது குறிக்கிறது. இந்த ஏழு சக்கரங்களும் ‘மக்கள்’, ‘பூமி’ மற்றும் ‘முன்னேற்றம்’ ஆகிய மூன்று அடிப்படைத் தூண்களை ஆதாரமாக கொண்டுள்ளன. அதாவது மனிதநேயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவையே இந்தியாவின் AI கொள்கையின் மையப்புள்ளிகளாகும்.
சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு
வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் நடத்தப்படும் முதல் சர்வதேச AI உச்சிமாநாடு இது என்பதால், உலக நாடுகள் இதன் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் 15 முதல் 20 நாடுகளின் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அமைச்சர்கள் மற்றும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாடு உலகளாவிய தொழில்நுட்ப நிர்வாகத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் மேலாதிக்கத்தையும், ஒரு வழிகாட்டியாக இந்தியாவின் புதிய பரிமாணத்தையும் பறைசாற்றுகிறது.
