கூகுள் நிறுவனத்தின் Gemini AI ஆரம்பத்தில் சுமாரான ரிசல்ட்டை தந்தாலும் சமீபகாலமாக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. புதிய மற்றும் நவீன அம்சங்கள் மூலம், இது தற்போது ChatGPTக்கு மிகச்சிறந்த போட்டியாக உருவெடுத்துள்ளது. ஜெமினியை வெறும் தேடல் கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், அதில் உள்ள நுணுக்கமான Settings மூலம் நமக்கேற்றவாறு எப்படி மாற்றியமைப்பது என்பது பலருக்கு தெரிவதில்லை. ஒரு கூகுள் கணக்கு இருந்தால் போதும், gemini.google.com தளத்திற்கு சென்று யாரும் இந்தத் தொழில்நுட்ப உலகிற்குள் நுழைந்து நமக்கு தேவையானவற்றை பெற முடியும். ஆனால் சில செட்டிங்ஸ் மூலம் கூடுதலாக நுணுக்கமான தகவல்களை பெறலாம். அது எப்படி என்று தற்போது பார்ப்போம்.
முதலில் ஜெமினியை பயன்படுத்தும்போது நாம் கவனிக்க வேண்டியது Activity Settings. உங்கள் Data எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதை தீர்மானிக்கும் இடம் இதுதான். இதில் உங்கள் உரையாடல்கள் எவ்வளவு காலம் சேமிக்கப்பட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். குறிப்பாக, கூகுள் Workspace பயன்படுத்தும் நிறுவனங்கள், அட்மின் மூலம் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யலாம். பாதுகாப்பு காரணங்களுக்காகச் சேமிப்பை முழுமையாக அணைத்து வைத்தால் சில வசதிகள் வேலை செய்யாது என்பதால், 3 முதல் 36 மாதங்கள் வரையிலான Auto-delete முறையை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
அடுத்ததாக, Instructions அம்சம் ஜெமினிக்கு உங்களை பற்றிப் புரிய வைக்கிறது. உங்கள் அடையாளம், இலக்குகள் மற்றும் அந்த இலக்குகள் ஏன் உங்களுக்கு முக்கியம் என்பதை இதில் பதிவு செய்யலாம். இதன் மூலம், ஜெமினி வெறும் மேலோட்டமான பதில்களை தராமல், உங்கள் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மிகவும் நெருக்கமான பதில்களை வழங்கும். இந்த வசதி தற்போது அமெரிக்க கணக்குகளில் அதிகம் பயன்பாட்டில் இருந்தாலும், விரைவில் உலகெங்கும் உள்ள பயனர்களுக்கு ஒரு முழுமையான பெர்சனல் அசிஸ்டெண்ட்டாக இது மாறும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெமினியின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் Gems எனப்படும் பிரத்யேக சாட்போட்கள். சாட்ஜிபிடியின் ஜிபிடிகளை போலவே, ஒரு குறிப்பிட்ட வேலைக்காக தனிப்பட்ட ஏஐ ஏஜென்ட்களை நீங்கள் உருவாக்கலாம். Enhance Prompt வசதியை பயன்படுத்தி உங்கள் கட்டளைகளை இன்னும் நேர்த்தியாக்க முடியும். இதில் Canvas போன்ற டூல்களை இணைப்பதன் மூலம், ஆவணங்களை உருவாக்குவது மற்றும் எடிட் செய்வது போன்ற வேலைகளை எளிதில் முடிக்கலாம்.
மேலும் கூகுள் Workspace Connectors மூலம் ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் காலண்டர் போன்றவற்றை நேரடியாக ஜெமினியுடன் இணைக்க முடியும். இது கேட்பதற்கு அருமையாக இருந்தாலும், தற்போதைய நிலையில் இது ஒரு Experimental வசதியாகவே உள்ளது. 10-ல் 8 முறை மட்டுமே இது சரியான தகவல்களை தருவதால், முக்கியமான காலண்டர் அப்டேட்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்களுக்கு பயனர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். எனினும், வரும் நாட்களில் இதன் துல்லியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில், ஜெமினி வெறும் ஒரு சாட்போட்டாக மட்டும் இல்லாமல், அது ஒரு முழுமையான Workflow கருவியாக மாறும். இணையத்தில் ஆய்வு செய்வது முதல், அதை ஒரு கட்டுரையாக மாற்றி, அதற்கேற்ற படங்களை உருவாக்குவது வரை அனைத்து பணிகளையும் ஒரே கட்டளையில் செய்யும் Smart Gems நோக்கி தொழில்நுட்பம் நகர்கிறது. நீங்கள் ஒரு கிரியேட்டராகவோ அல்லது தொழில்முறை பணியாளராகவோ இருந்தால், ஜெமினியின் இந்த நுணுக்கமான செட்டிங்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் உங்களின் உற்பத்தி திறனை இன்னும் பல மடங்கு உயர்த்தி உங்கள் துறையில் நீங்கள் ஒரு ஜாம்பவனாக மாறமுடியும்.
