சீனாவின் DeepSeek நிறுவனம் கடந்த ஆண்டு தனது ஏஐ கருவியை வெளியிட்டபோது, அது வெறும் தொழில்நுட்ப அறிமுகமாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த உலக டெக் சந்தையையும் அதிரவைத்த ஒரு சம்பவமாக அமைந்தது. OpenAI போன்ற பெரும் நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்திக்கும் அளவுக்கு இதன் தாக்கம் பலமாக இருந்தது.
DeepSeek ஏற்படுத்திய அதிரடி மாற்றங்களும் உலகளாவிய விலை போரும்!
DeepSeek அறிமுகமாகி சரியாக ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த நிறுவனம் காட்டிய அதே பாதையில் பயணிக்க பல சீன நிறுவனங்கள் தற்போது வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளன. DeepSeekஐ விடவும் குறைந்த செலவில், அதே சமயம் அதிகத் திறன் கொண்ட ஏஐ மாடல்களை உருவாக்க பல சீன நிறுவனங்கள் திட்டமிட்டு வருவது ஏஐ உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய ஏஐ சந்தை
கடந்த ஆண்டு டீப்சீக் ஏற்படுத்திய தாக்கம் சீன சந்தையை மட்டும் பாதிக்கவில்லை; உலகளாவிய ஏஐ சந்தையின் போக்கையே முழுமையாக மாற்றி அமைத்தது. மிகக்குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட சேவைகளை வழங்கியதால், அலிபாபா, பைடு போன்ற முன்னணி நிறுவனங்கள் வேறு வழியின்றி தங்களது சேவைகளின் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.
மலிவான விலையில் தரமான ஏஐ சேவைகள்
தற்போது டீப்சீக்கின் போட்டியாளர்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ‘கன்ஸ்யூமர் ஃப்ரெண்ட்லி’ மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். டீப்சீக் காட்டிய அதே வழியில், மிகவும் மலிவான விலையில் தரமான ஏஐ சேவைகளை வழங்க பல சீன நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இது ஏஐ கருவிகளுக்கு இடையேயான ஒரு மாபெரும் போராகவே பார்க்கப்படுகிறது.
குவியும் முதலீடுகள்
ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஏஐ கருவி டீப்சீக் போன்ற அல்லது அதைவிட சிறந்த வளர்ச்சியை பெறும் என்ற நம்பிக்கையில் முதலீடுகளை குவித்து வருகின்றன. டெக்னாலஜி துறையில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான போட்டி, நிறுவனங்களின் லாபத்தை பாதிக்கலாம். ஆனால், சாதாரண பயனர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பயனர்களுக்கு கொண்டாட்டம்
ஏஐ கருவிகளின் இந்த விலை போர், சாமானிய மக்களும் அதிநவீன தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த விலையில் பயன்படுத்த வழிவகுக்கும். வரும் காலங்களில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் இந்த சீன ஏஐ கருவிகள், உலகளவில் ஏஐ சேவைகளின் விலையை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
