Napkin AI : நீளமா எழுதினா யாருக்கும் புரியாது… ஆனா அதையே ஒரு Napkin AI மூலம் படமா மாத்தினா புரியாதது கூட புரியும்!


இன்றைய இணைய உலகில் தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில், பெரும்பாலான தகவல்கள் உரைநடை வடிவிலேயே பகிரப்படுகின்றன. ஆனால், ஒரு சிக்கலான கருத்தையோ அல்லது புதிய யோசனையையோ வெறும் எழுத்துக்கள் மூலம் மற்றவர்களுக்கு புரிய வைப்பதில் சில நடைமுறை சிரமங்கள் இருக்கலாம். இதற்கு மாற்றாக, நமது கருத்துக்களை படங்கள் அல்லது விளக்கப்படங்கள் வடிவில் வெளியிட்டால், அது பயனர்கள் மத்தியில் மிகத் தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்தும். அந்த வகையில், நாம் எழுதும் உரையை துல்லியமான விளக்கப்படங்களாக மாற்றும் ஒரு அற்புதமான கருவிதான் ‘நாப்கின் ஏஐ’ (Napkin AI).

மூன்று முக்கிய நிலைகளில் செயல்படும்..

இந்தக் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், டிசைனிங் துறையில் எந்தவிதமான முன் அனுபவமும் அல்லது தொழில்நுட்பத் திறனும் இல்லாதவர்கள் கூட, ஒரே நிமிடத்தில் தொழில்முறை விளக்கப்படங்களை இதன் மூலம் உருவாக்கிவிட முடியும். இது மூன்று முக்கிய நிலைகளில் செயல்படுகிறது. முதலாவதாக, நீங்கள் விளக்க விரும்பும் தகவலை நீண்ட நேரம் டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை; ஏற்கனவே உங்களிடம் உள்ள உரையை இங்கே ‘பேஸ்ட்’ செய்தாலே போதும். மற்ற ஏஐ கருவிகளைப் போல இதற்காக நீங்கள் பிரத்யேகமாக ‘பிராம்ப்டுகளை’ எழுத வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நுணுக்கமாக ஆய்வு

இரண்டாவது நிலையில், நீங்கள் கொடுத்த உரையை இந்த ஏஐ நுணுக்கமாக ஆய்வு செய்து, அதற்கு பொருத்தமான இன்ஃபோகிராபிக்ஸ், வரைபடங்கள் அல்லது Flowchartsகளை நொடிப்பொழுதில் உருவாக்கி தரும். திரையில் தோன்றும் பல்வேறு வடிவமைப்புகளில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். மூன்றாவதாக, கிடைத்த ரிசல்ட்டை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மெருகேற்றி கொள்ளலாம். ஏஐ உருவாக்கிய படத்தை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதில் உள்ள ஐகான்கள், வண்ணங்கள் மற்றும் Fonts போன்றவற்றை மாற்றியமைத்து தனித்துவமாக்கி கொள்ளலாம்.

தமிழ் உட்பட 60-க்கும் மேற்பட்ட மொழிகள்

நாப்கின் ஏஐ-ன் வேகத்தைப் பொறுத்தவரை, ஒரு சாதாரண பத்தியைக் கூட வெறும் பத்து வினாடிகளுக்குள் முழுமையான விளக்கப்படமாக மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. இதில் ஃப்ளோசார்ட்டுகள், மைண்ட் மேப்புகள் மற்றும் டைம்லைன்ஸ் என பல வகைகளை உருவாக்க முடியும். இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்களை PNG, PDF அல்லது PPT போன்ற பல்வேறு கோப்பு வடிவங்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும், தமிழ் உட்பட 60-க்கும் மேற்பட்ட மொழிகளை இது ஆதரிப்பதால், உலகெங்கிலும் உள்ள பயனர்கள் தங்களுக்கு தெரிந்த மொழிகளில் கருத்துக்களை படங்களாக மாற்றலாம்.

யாருக்கு உதவியாக இருக்கும்?

இக்கருவி பல்வேறு துறையினருக்கு பெரும் உதவியாக இருக்கும். கடினமான பாட கருத்துக்களை மாணவர்களுக்கு எளிமையாக விளக்குவதற்கு ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தலாம். அதேபோல், அலுவலக கூட்டங்களில் பிரசன்டேஷன்களை அதிக ஈர்ப்புடன் காட்ட விரும்பும் பணியாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். நீண்ட கட்டுரைகளை வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இடையிடையே விளக்கப்படங்களை சேர்க்க விரும்பும் கன்டென்ட் ரைட்டர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அறிவு சார்ந்த பதிவுகளை இடும் கிரியேட்டர்களுக்கும் இது மிக சிறந்த உதவியாளராக இருக்கும்.

பிரீமியம் சேவை

கட்டண முறையை பொறுத்தவரை, நாப்கின் ஏஐ ‘ஃப்ரீமியம்’ மாடலில் செயல்படுகிறது. இதன் பீட்டா பதிப்பை பயன்படுத்தும் பயனர்கள் வாரத்திற்கு 500 கிரெடிட்களை இலவசமாக பெறலாம். இதன் மூலம் ஆரம்பக்கட்ட தேவைகளை எவ்வித செலவுமின்றி நிறைவேற்றி கொள்ள முடியும். இருப்பினும், அதிகப்படியான வசதிகள் மற்றும் கூடுதல் பயன்பாடு தேவைப்படுபவர்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பிரீமியம் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். உங்கள் கற்பனையை விஷுவல் வடிவமாக மாற்ற விரும்பினால், நாப்கின் ஏஐ ஒரு சிறந்த டிஜிட்டல் மந்திரக்கோலாகும்.


MailMaestro AI: மெயில்கள் INBOX-ல் குவிந்து கிடக்கிறதா? எல்லாத்தும் பதில் அனுப்புறது ரொம்ப ஈஸி.. அதுக்கு தான் MailMaestro AI இருக்குதே..!