Fireflies AI : மீட்டிங்கில் யார் என்ன சொன்னாங்கன்னு மண்டையை பிச்சிக்க தேவையில்லை… Fireflies.ai கிட்ட ஒரு வார்த்தை கேளு, ஒரே செகண்ட்ல பதிலை அள்ளி வீசும்!

 

Fireflies

ஒரு காலத்தில் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து, நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து நேரில் ஆலோசனை செய்வதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் Zoom போன்ற செயலிகள் மூலம் ஆன்லைன் மீட்டிங்குகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. கார்ப்பரேட் உலகில் இத்தகைய ஆன்லைன் கூட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூட்டத்தின் போது குறிப்பு எடுப்பதும், யார் என்ன சொன்னார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்வதும் சவாலான காரியமாக உள்ளது. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகவே Fireflies.ai என்ற ஏஐ தளம் அறிமுகமாகியுள்ளது.


இது ஒரு செயற்கை நுண்ணறிவு சார்ந்த ‘மீட்டிங் உதவியாளர்’ ஆகும். ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்ட முக்கிய தளங்களில் நடக்கும் உரையாடல்களை இது தானாகவே பதிவு செய்து, அவற்றை எழுத்து வடிவில் அதாவது Transcript செய்து தருகிறது. நீங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது, Fireflies.ai தானாகவே அதில் இணைந்து கொண்டு, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளம் கண்டு, அவர்கள் பேசுவதை மிக துல்லியமாக நோட்ஸ் எடுக்கிறது.


ஒரு நீண்ட உரையாடல் நடந்து முடிந்ததும், அந்த மீட்டிங்கின் சாராம்சத்தை மிக குறுகிய நேரத்தில் முக்கியமான பகுதிகளாக பிரித்து இது வழங்குகிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகள் என்ன, அடுத்தகட்டமாக யார் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை தெளிவாக பட்டியலிடுகிறது. இதன் மூலம் மணிக்கணக்கில் நடந்த கூட்டத்தின் விவரங்களை ஒரு சில நிமிடங்களில் வாசித்து புரிந்துகொள்ள முடியும்.


இந்த ஏஐ கருவியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், நடந்த மீட்டிங்கில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை தேடிப் பெற முடியும். உதாரணமாக, “ரமேஷ் என்ன சொன்னார்?” அல்லது “சுரேஷ் கேட்ட கேள்விக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?” என்பது போன்ற கேள்விகளை கேட்டால், அந்த உரையாடல் பதிவுகளில் இருந்து சரியான பதிலை தேடி எடுத்து வழங்கும். கூகுள் மீட் பயன்படுத்துபவர்கள் எந்தவித தொந்தரவும் இன்றி ‘குரோம் எக்ஸ்டென்ஷன்’ மூலமாகவே இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


Fireflies.ai தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உங்கள் காலெண்டருடன் இதை ஒருமுறை இணைத்துவிட்டால் போதும், அதுவே கூட்ட நேரத்தை கண்டறிந்து கூட்டத்தில் இணைந்து கொள்ளும். இதன் இலவச திட்டத்தில் வரம்பற்ற டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் சில ஏஐ சுருக்கங்கள் கிடைக்கின்றன. கூடுதல் சேமிப்பு வசதி மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் தேவைப்படுவோர், மாதத்திற்கு 10 டாலர் முதல் தொடங்கும் புரோ திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


வழக்கமான ஆன்லைன் கூட்டங்களை நடத்துபவர்கள் மற்றும் ஸ்லாக் போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். குறிப்பாக, 100-க்கும் மேற்பட்ட மொழிகளை இது ஆதரிக்கிறது. இருப்பினும், நேரில் நடக்கும் ஆஃப்லைன் கூட்டங்களுக்கு மட்டும் குறிப்பு எடுப்பவர்கள் அல்லது கூட்டத்தில் Bot நுழைவதை விரும்பாதவர்கள் இதனை தவிர்க்கலாம். மொத்தத்தில், உங்கள் மீட்டிங் குறிப்புகளை கையாள்வதில் உள்ள சுமையை குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவோருக்கு Fireflies.ai ஒரு வரப்பிரசாதமாகும்.


Gamma AI : ஐடியா மட்டும் இருந்தா போதும்.. வெப்சைட்டோ, பிரசண்டேஷனோ இனி ரொம்ப ஈஸி.. உங்க கற்பனைக்கு வேகம் கொடுக்க ஒருத்தன் வர்றான்… அவன் பேரு தான் Gamma AI..