AI தொழில்நுட்பம் இன்று பல்வேறு துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் வேளையில், Software Developersகளுக்கு அது ஒரு வரப்பிரசாதமாகவே மாறியுள்ளது. குறிப்பாக, ஒரு டெவலப்பரின் 90 சதவீத வேலையை மிச்சப்படுத்தும் திறன் கொண்ட AI கருவிகள் இன்று புழக்கத்திற்கு வந்துள்ளன. அந்த வகையில், Software துறையில் ஒரு மைல்கல்லாக கருதப்படுவதுதான் GitHub Copilot. இது டெவலப்பர்களுக்கு ஒரு இரண்டாவது மூளையாக இருந்து, சிக்கலான கோடிங் பணிகளை மிக எளிதாக முடிக்க உதவுகிறது.
மைக்ரோசாப்ட், கிட்ஹப் மற்றும் ஓபன் ஏஐ ஆகிய உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த சிறப்பான அம்சத்தை உருவாக்கியுள்ளன. இது ஒரு AI Pair Programmer ஆக செயல்படுகிறது. அதாவது, ஒரு மனித புரோகிராமருடன் இணைந்து மற்றொரு புரோகிராமர் வேலை செய்தால் எப்படி இருக்குமோ, அதேபோல் இந்த AI கருவி நிகழ்நேரத்தில் ஆலோசனைகளை வழங்குகிறது. நீங்கள் ஒரு வரியை எழுத தொடங்கினால், உங்கள் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்டு மீதமுள்ள கோடிங்கை அதுவே கணித்துத் தருவது இதன் மிகப்பெரிய பலமாகும்.
இதன் பயன்பாடுகள் வெறும் கோடிங்கை முடிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. சாதாரண மனித மொழியில் நீங்கள் ஒரு தேவையை குறிப்பிட்டால், அதற்கான முழுமையான புரோகிராமிங் கோடை இதுவே தயார் செய்துவிடும். உதாரணமாக, ஒரு பட்டியலை வரிசைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஆங்கிலத்தில் கட்டளையிட்டால் போதும், அதற்கான துல்லியமான லாஜிக்கை இது நொடி பொழுதில் உருவாக்கி தரும். இது டெவலப்பர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அவர்களின் சிந்திக்கும் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது.
தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், GitHub Copilot கருவியானது ஓபன் ஏஐ நிறுவனத்தின் Codex எனும் சக்திவாய்ந்த மாடலில் இயங்குகிறது. Python, JavaScript, C++ என இணையத்தில் இன்று பிரபலமாக உள்ள பெரும்பாலான புரோகிராமிங் மொழிகளை இது அசாத்தியமாக கையாள்கிறது. மேலும், டெவலப்பர்கள் அன்றாடம் பயன்படுத்தும் VS Code, Visual Studio போன்ற மென்பொருள் தளங்களில் ஒரு சிறு Extension இதை எளிதாக பொருத்திக் கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
கோடிங்கில் ஏற்படும் பிழைகளை கண்டறிவதிலும், அந்த பிழைகளை எப்படி சரிசெய்வது என்ற ஆலோசனைகளை வழங்குவதிலும் இது மிக சிறப்பாக செயல்படுகிறது. மென்பொருள் உருவாக்கத்தின் மிக முக்கியமான பகுதியான ‘யூனிட் டெஸ்டிங்’ முறைகளை இது தானாகவே உருவாக்கி தருவதால், மென்பொருளின் தரம் உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு மென்பொருளை உருவாக்கி முடிப்பதற்கான கால அளவு வெகுவாக குறைகிறது, இது நிறுவனங்களுக்குப் பெரும் லாபத்தை தருகிறது.
