பாஸ்போர்ட்ல இருந்து டிரைவிங் லைசென்ஸ் வரைக்கும் எதுவா இருந்தாலும் சரி… நீங்க ஓகே சொன்னா தான் இனி கூகுள்ல அது இருக்கும், இல்லனா அவுட்!




இணையதளத்தில் பரவி வரும் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதிலும், அடையாள திருட்டை தடுப்பதிலும் முன்னெச்சரிக்கையாக செயல்படும் கூகுள் நிறுவனம், தற்போது தனது பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அரணை உருவாக்கியுள்ளது. “Results about you” என்ற தனது பிரத்யேக பாதுகாப்பு கருவியை மேம்படுத்தி, முக்கியமான அடையாள அட்டைகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை தேடல் முடிவுகளில் இருந்து நீக்கும் வசதியை கூகுள் தற்போது விரிவுபடுத்தியுள்ளது.


கூகுளின் புதிய பாதுகாப்புப் புரட்சி:


முன்பு இந்த வசதி தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் வீட்டு முகவரிகளை நீக்க மட்டுமே பயன்பட்டது. ஆனால் தற்போது இதன் அடுத்தகட்டமாக ஓட்டுநர் உரிமம் , பாஸ்போர்ட் விபரங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு எண்கள் போன்ற மிகவும் ரகசியமான மற்றும் முக்கியமான அரசு அடையாள ஆவணங்களையும் கூகுள் தேடல் முடிவுகளில் இருந்து நீக்க பயனர்கள் கோரிக்கை விடுக்கலாம்.


Results about you


கூகுள் ஆப் மூலம் உங்கள் கணக்கின் சுயவிவர புகைப்படத்தை க்ளிக் செய்வதன் மூலம் இந்த “Results about you” வசதியை எளிதாக அணுகலாம். இதில் பயனர்கள் தாங்கள் கண்காணிக்க விரும்பும் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட வேண்டும். ஒருமுறை நீங்கள் தகவல்களை பதிவேற்றியதும், கூகுள் தானாகவே தேடல் முடிவுகளை ஸ்கேன் செய்து, உங்கள் தகவல்கள் எங்கேனும் இணையத்தில் தென்பட்டால் உடனடியாக உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும்


நீக்கினாலும் அது அப்படியேதான் இருக்கும்


கூகுள் தேடல் முடிவுகளில் இருந்து ஒரு லிங்கை நீக்குவது என்பது, அந்த தகவல் இணையத்தில் இருந்தே முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல. அந்த தகவல் எந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதோ, அங்கு அது அப்படியேதான் இருக்கும். இருப்பினும், உலகின் மிகப்பெரிய தேடல் பொறியான கூகுளில் அது தென்படாது என்பதால், தவறான நபர்களின் கைகளுக்கு உங்கள் ரகசிய தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு பெருமளவு குறைகிறது.


போலி கிரெடிட் கார்டுகள்


கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 11 லட்சத்திற்கும் அதிகமான அடையாள திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. திருடப்பட்ட தகவல்களை கொண்டு போலி கிரெடிட் கார்டுகள் தொடங்குவது, பிறர் பெயரில் வேலைவாய்ப்புகளை பெறுவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால், கூகுள் இந்த அதிரடி முயற்சியை எடுத்துள்ளது. இந்த சேவை தற்போது அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.


கூகுளின் விளக்கம்


கூகுளிடம் நமது அடையாள அட்டை எண்களை பகிர வேண்டுமா என்று தயங்குபவர்களுக்காக கூகுள் தெளிவான விளக்கம் அளித்துள்ளது. பயனர்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் Encryption முறையில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. மேலும், கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மூலம் இந்த தரவுகள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை கூகுள் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் ‘டிஜிட்டல் அடையாளத்தை’ இனி கவலையின்றி பாதுகாக்க முடியும்.


DeepSeek புயலையே தாங்க முடியலை.. இப்ப சீனா முழுவதும் ஏஐ நிறுவனங்கள் தான்.. OpenAI உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு திண்டாட்டம் தான்..