AI தொழில்நுட்பம் இன்று நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது. ஒரு காலத்தில் Coding எழுதுவது என்பது மிகவும் கடினமான, ஒரு குறிப்பிட்ட நிபுணர்களுக்கு மட்டுமே தெரிந்த கலையாக இருந்தது. ஆனால், AI வருகை அந்த பிம்பத்தை முற்றிலுமாக உடைத்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் “கோடிங் இல்லாத உலகம்” என்ற புரட்சி ஏற்படப்போவது குறித்த செய்திகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ப்ரோக்ராமிங் தெரிந்தால் மட்டுமே மென்பொருளை உருவாக்க முடியும் என்ற நிலை மாறி, இன்று தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களும் படைப்பாளர்களாக உருவெடுத்து வருகின்றனர்.
நோ-கோடிங் புரட்சியும் மென்பொருள் உருவாக்கமும்
2026-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களின் அன்றாட வேலைகளில் சுமார் 70 சதவீதம் AI மூலம் கையாளப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு வரி கோடிங் கூட தெரியாமல் ஒருவர் மென்பொருள் வல்லுநராக மாற முடியும் என்பதுதான். Gartner நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்த ஆண்டு உருவாக்கப்படும் புதிய செயலிகளில் 75 சதவீதம் Low-coding அல்லது No-coding தளங்களிலேயே உருவாக்கப்படும். மைக்ரோசாப்ட் பவர் ஆப்ஸ் மற்றும் கூகுள் ஆப்ஷீட் போன்ற தளங்கள், வெறும் ‘டிராக் அண்ட் டிராப்’ முறையிலேயே சிக்கலான வேலைப்பளுவை எளிதாக்கி வருகின்றன.
ஏஐ ஏஜெண்டுகளின் அதிரடி வளர்ச்சி
ஓபன் ஏஐ நிறுவனத்தின் Custom GPTs மூலம் சாமானிய மனிதர்களும் தங்களுக்கு தேவையான AI கருவிகளை சொந்தமாக உருவாக்கி வருகின்றனர். காக்னிஷன் லேப் உருவாக்கிய Devon போன்ற AI ஏஜெண்டுகள், தாமாகவே ஒரு முழுமையான இணையதளத்தை உருவாக்கி, அதில் உள்ள பிழைகளையும் கண்டறிந்து சரிசெய்யும் திறன் கொண்டவை. இதனால் மென்பொருள் துறையில் மனிதர்களின் தலையீடு குறைந்து, வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது தொழில்நுட்ப துறையில் ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெய்நிகர் உலகமும் ஸ்மார்ட் கண்ணாடிகளும்
கம்ப்யூட்டர் திரையை ஒரு இடத்தில் அமர்ந்து பார்த்து வேலை செய்யும் காலம் மெல்ல மறைந்து வருகிறது. ஆப்பிளின் Vision Pro மற்றும் Meta XR போன்ற மெய்நிகர் உலக கருவிகள் இந்த பணியை எளிதாக்குகின்றன. 2026-க்குள் ஸ்மார்ட் கண்ணாடிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது, போனை தொடாமலேயே வெறும் கை அசைவுகள் மற்றும் பார்வையின் மூலமாகவே தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். இது மனிதர்கள் டிஜிட்டல் உலகத்துடன் தொடர்பு கொள்ளும் முறையையே மாற்றி அமைக்க போகிறது.
மூளைச் சிப் மற்றும் ரோபோக்களின் வருகை
தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக, Neuralink போன்ற நிறுவனங்கள் மனித மூளையில் சிப்களை பொருத்தி, நினைப்பதன் மூலமே கணினியை இயக்கும் சோதனையில் வெற்றி பெற்றுள்ளன. இது பக்கவாதம் மற்றும் நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமையும். அதேபோல், Tesla Optimus Gen 3 போன்ற ஹியூமனாய்டு ரோபோக்கள் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு உதவியாக மாறவுள்ளன. அமேசான் போன்ற நிறுவனங்களில் ஏற்கனவே ‘டிஜிட்’ ரோபோக்கள் பணியில் உள்ள நிலையில், இவை விரைவில் மலிவான விலையில் சந்தைக்கு வரவுள்ளன.
மனித உழைப்பும் ஓய்வு நேரமும்
AI தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக இருக்க முடியுமா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், அது மனிதர்களின் வேலையை சுலபமாக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. கடினமான மற்றும் சலிப்பான வேலைகளை AI எடுத்து கொள்வதால், மனிதர்களுக்கு அதிகப்படியான ஓய்வு நேரமும், ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்த தெரிந்தால், எதிர்காலம் என்பது மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான ஒரு அற்புதமான இணக்கமான பயணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
