Nvidia தனிக்காட்டு ராஜாவாக இருந்த காலம் முடியப்போகுது… ஏன்னா, இப்போ ரேஸ்ல Intel குதிச்சிருக்கு… இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கும்!”

 

Nvidia

உலகளாவிய சந்தையில் பல ஆண்டுகளாக CPU துறையில் ராஜாவாக திகழ்ந்த இன்டெல் நிறுவனம், இப்போது ஒரு மிகப்பெரிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. GPU என்று கூறப்படும் கிராபிக்ஸ் பிராசஸர் யூனிட் சந்தையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் Nvidia நிறுவனத்திற்கு போட்டியாக, தாங்களும் GPU தயாரிப்பில் இறங்கப்போவதாக இன்டெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Lip-Bu Tan இந்த அதிரடித்திட்டத்தை வெளியிட்டு, தொழில்நுட்ப உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற Cisco AI Summit மாநாட்டில் பேசிய லிப்-பு டான், தற்போது நிலவி வரும் AI புரட்சி பற்றி விரிவாகப் பேசினார். நவீன AI மாடல்களை பயிற்சி செய்வதற்கும், சிக்கலான தரவுகளை கையாளுவதற்கும், மற்றும் அதிவேகமான கேமிங் அனுபவத்திற்கும் ஜிபியு-க்களின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்டெல் தனது புதிய தயாரிப்புகளை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.


தற்போது ஜிபியு சந்தையை பொறுத்தவரை என்விடியா நிறுவனம் எவ்வித போட்டியும் இன்றி ஒரு தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் என்விடியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அதற்கு சரியான சவால் கொடுக்க ஒரு வலுவான போட்டியாளர் தேவைப்பட்டது. அந்த இடத்தை பிடிக்கவே இன்டெல் நிறுவனம் இப்போது ஜிபியு தயாரிப்பில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இது சந்தையில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பிரம்மாண்ட திட்டத்தைச் செயல்படுத்த இன்டெல் நிறுவனம் ஒரு மிகச்சிறந்த நிபுணர் குழுவை திரட்டியுள்ளது. இன்டெல்லின் டேட்டா சென்டர் குழுவின் துணை தலைவர் கெவோர்க் கெச்சிச்சியன் இந்த திட்டத்தை முன்னின்று நடத்துவார். அவருடன் இணைந்து பணியாற்ற, Qualcomm)நிறுவனத்தில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி அனுபவம் பெற்ற எரிக் டெமர்ஸ் போன்ற ஜாம்பவான்களையும் இன்டெல் களமிறக்கியுள்ளது.


இருப்பினும், இந்த ஜிபியு தயாரிப்பு திட்டம் தற்போது அதன் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக லிப்-பு டான் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் துல்லியமான தேவைகள் என்ன, சந்தையில் எதற்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, அதற்கேற்பவே இன்டெல்லின் தயாரிப்பு உத்திகள் வகுக்கப்படும். என்விடியா ஏற்கனவே இந்த துறையில் பல மைல்கற்களை எட்டியுள்ளதால், அவர்களை வீழ்த்த இன்டெல் மிகவும் புதுமையான மற்றும் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


இறுதியாக, இன்டெல்லின் இந்த வருகை சாதாரண பயனர்களுக்கும் கேமர்களுக்கும் ஒரு நற்செய்தியாகவே அமையும். ஏனெனில், சந்தையில் போட்டி அதிகரிக்கும் போது தயாரிப்புகளின் விலை குறையவும், தரம் மற்றும் வேகம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம். என்விடியா மற்றும் இன்டெல் ஆகிய இரண்டு ஜாம்பவான்களும் மோதிக்கொள்ளும் இந்தப் புதிய தொழில்நுட்பப் போர், வரும் ஆண்டுகளில் கம்ப்யூட்டிங் மற்றும் ஏஐ உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.


Wix AI : கோடிங் தெரிய வேண்டாம்.. ப்ரோகிராமிங் தெரிய வேண்டாம்.. Wix AI இருந்தால் போதும்.. ஒருசில நிமிடங்களில் வெப்சைட் ரெடி..