ஒரு சில வருடங்களுக்கு முன்னால் வரை ஒரு புதிய இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்றால், நாம் டெவலப்பர்களிடம் சென்று நமது தேவைகளை மணிக்கணக்கில் விளக்க வேண்டியிருந்தது. பல நேரங்களில் அவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து குறிப்புகளை வழங்கினாலும், ஒரு முழுமையான இணையதளத்தை பெற ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது AI தொழில்நுட்பத்தின் வருகைக்கு பிறகு, இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஒரு சில மணிநேரங்களிலேயே நமக்கு விருப்பமான இணையதளத்தை உருவாக்கி தருவதில் AI தொழில்நுட்பம் இன்று மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
உங்களுக்கு தேவைப்படும் இணையதளம் வணிகம் சார்ந்ததா, ஆன்லைன் ஸ்டோரா அல்லது செய்திகள் உள்ளடக்கியதா என்பதை விவரித்தால் மட்டுமே போதும்; அதற்கேற்ற லேஅவுட், உள்ளடக்கம், படங்கள் மற்றும் லோகோ என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான இணையதளப் பக்கத்தை Wix AI தளம் சில நிமிடங்களில் தயார் செய்து கொடுத்துவிடும். சில அடிப்படை தகவல்களை வழங்கிய உடனேயே, ஒரு தொழில்முறை இணையதளத்தை உருவாக்குவதில் Wix AI தற்போது முன்னணியில் உள்ளது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தெளிவாக தளத்தின் நோக்கத்தை விவரிக்கிறோமோ, அவ்வளவு சிறப்பான முடிவுகளை இது வழங்குகிறது.
Wix AI தளத்தில் உள்ள AI டெக்ஸ்ட் ஜெனரேட்டர்’ மூலம் இணையதளப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கங்களை நமக்கு தேவையானவாறு மாற்றி அமைத்து கொள்ள முடியும். மேலும், இதில் புதிய படங்களை சேர்க்கும்போது, AI தொழில்நுட்பமானது அந்த படங்களை இணையதளத்தின் லேஅவுட்டுக்கு ஏற்றவாறு தானாகவே Resize செய்து கொள்கிறது. குறைவான நேரத்தில் மற்றும் மிக குறைந்த செலவில் ஒரு தரமான இணையதளத்தை பெற விரும்புவோருக்கு Wix AI ஒரு சிறந்த வரப்பிரசாதமாக திகழ்கிறது.
ப்ரோக்ராமிங் மொழிகள் தெரியாதவர்கள் அல்லது கோடிங் எழுத தெரியாதவர்கள் கூட மிக எளிமையான முறையில் இணையதளத்தை வடிவமைக்க Wix AI பெரிதும் உதவுகிறது. இது வெறும் வடிவமைப்புடன் நின்றுவிடாமல், இணையதளம் வழியாக பணம் செலுத்தும் வசதி , SEO, மற்றும் வாடிக்கையாளர் முன்பதிவு போன்ற அனைத்து வணிக அம்சங்களையும் ஒரே இடத்தில் கட்டமைத்து தருகிறது. இதனால் பயனர்கள் தொழில்நுட்ப சிக்கல்கள் இன்றி தங்கள் வணிகத்தில் கவனம் செலுத்த முடிகிறது.
Wix AI தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் அதன் எளிமையான எடிட்டர் வசதியாகும். பக்கங்களின் பெயரை மாற்றுவது, புதிய படங்களை சேர்ப்பது அல்லது கூடுதல் பிரிவுகளை உருவாக்குவது போன்ற பணிகளுக்கு எந்தவொரு மூன்றாம் தர மென்பொருளும் தேவையில்லை. அத்துடன் லோகோ உருவாக்குதல், மின்னஞ்சல் மார்க்கெட்டிங் போன்ற அனைத்து வசதிகளும் இதிலேயே உள்ளமைக்கப்பட்டுள்ளதால், பயனர் வெவ்வேறு செயலிகளுக்கு மாற வேண்டிய அவசியமில்லாமல் அனைத்து வேலைகளையும் ஒரே இடத்தில் முடித்துக்கொள்ளலாம்.
குறிப்பாக சிறு வணிகத்தை தொடங்குபவர்கள் அல்லது தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள், குறைந்த செலவில் ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு Wix AI மிகவும் உதவிகரமாக இருக்கும். இதன் இலவச திட்டத்திலேயே AI கருவிகள் மற்றும் பலவிதமான டெம்ப்ளேட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆரம்ப கட்டத்தில் இதை பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது கூடுதல் தொழில்முறை அம்சங்கள் தேவைப்படும்போது பணம் செலுத்தி பிரீமியம் திட்டங்களுக்கு மாறி கூடுதல் அம்சங்களை பெற்று கொள்ளும் வசதியும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
