RSS FEEDS: மறுபடியும் ஃபேமஸ் ஆகும் RSS Feeds.. அல்காரிதம் காட்டுறது வெறும் போலி இரைச்சல்… RSS Feeds தேடி போறதுதான் AI குப்பையை தவிர்க்கும் ஒரே வழி..!

 


RSS feeds

AI தொழில்நுட்பம் மனித குலத்திற்கு பெரும் வரப்பிரசாதமாக உருவெடுத்திருந்தாலும், அதன் மறுபக்கத்தில் AI Slop எனப்படும் இணைய குப்பைகள் அசுர வேகத்தில் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆண்ட்ரே கர்பதி, இந்த தரம் குறைந்த படைப்புகள் இணையத்தின் நம்பகத்தன்மையை சிதைப்பதாக எச்சரித்துள்ளார். முழுக்க முழுக்க மென்பொருள்களால் உருவாக்கப்படும் கட்டுரைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், மனித உழைப்பில் உருவான படைப்புகளை விட தரம் குறைந்தவையாக இருப்பதோடு, இணையவெளியை ஆக்கிரமித்து அசல் தகவல்களை தேடுவதை கடினமாக்குகின்றன.


இத்தகைய “AI குப்பைகள்” உருவாக்கப்படுவதன் பின்னணியில் ஒரு பெரிய வணிக நோக்கம் ஒளிந்துள்ளதாக கர்பதி சுட்டிக்காட்டுகிறார். வெறும் ‘லைக்’, ‘ஷேர்’ மற்றும் ‘கிளிக்’குகளைப் பெற்று, அதன் மூலம் விளம்பர வருவாயை பெருக்குவதே இத்தகைய தரம் குறைந்த உள்ளடக்கங்களின் பிரதான நோக்கமாகும். இதனால்தான் யூடியூப் போன்ற தளங்கள், ஆக்கபூர்வமான சிந்தனை இன்றி வெறும் AI உதவியுடன் மட்டும் பதிவேற்றப்படும் சேனல்களை கண்டறிந்து முடக்க தொடங்கியுள்ளன. இது வெறும் தொழில்நுட்ப போட்டி மட்டுமல்ல, இணையத்தின் தரத்தை பாதுகாப்பதற்கான ஒரு போராட்டமாகவே பார்க்கப்படுகிறது.


இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க, கர்பதி முன்வைக்கும் தீர்வு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. Algorithms நமக்கு எதை திணிக்கின்றனவோ அதை அப்படியே ஏற்று கொள்வதற்குப் பதிலாக, மீண்டும் RSS Feeds எனும் பழைய முறைக்கு திரும்ப வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார். சமூக வலைதளங்கள் காட்டும் பரிந்துரைகளை தவிர்த்துவிட்டு, நமக்கு தேவையான தரமான இணையதளங்களையும், படைப்பாளர்களையும் நாமே தேர்ந்தெடுத்துப் படிக்கும் இந்த முறைதான் தரமான வாசிப்புக்கு வழிவகுக்கும் என்பது அவரது ஆணித்தரமான கருத்தாகும்.


அண்மை காலமாகத் தானும் RSS Feedsகளை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளதாகக்குறிப்பிட்ட கர்பதி, அங்குதான் ஆழமான மற்றும் தரமான கட்டுரைகள் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு அடிப்படையாக AI தொழில்நுட்பத்தை அவர் குற்றம் சொல்லவில்லை; மாறாக சில தளங்கள் இயங்கும் விதமே இதற்கு காரணம் என்கிறார். பயனர்களை தளத்திலேயே கட்டிப்போட வேண்டும் என்பதற்காக ஆத்திரமூட்டும் கருத்துக்களையும், தேவையற்ற சர்ச்சைகளையும் அல்காரிதம்கள் முன்னிறுத்துகின்றன. இந்தத் தரம் குறைந்த குப்பைகள் அதிகரித்தால், அது எதிர்கால சமுதாயத்தில் மிகப்பெரிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கிறார்.


RSS Feeds முறையை பின்பற்றுவதன் மூலம், அல்காரிதம்களின் பிடியிலிருந்து விடுபட்டு நாம் எதை படிக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற சுயமான முடிவை எடுக்க முடியும். கிளிக்-பைட்டுகளுக்காக வைக்கப்படும் கவர்ச்சிகரமான பொய் தலைப்புகள், தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் வன்மத்தை தூண்டும் உள்ளடக்கங்களை இதன் மூலம் எளிதாக தவிர்க்கலாம். இது பயனர்களுக்கு தகவல் தெரிவு செய்யும் சுதந்திரத்தை அளிப்பதுடன், இணையத்தில் செலவிடும் நேரத்தையும் பயனுள்ளதாக்குகிறது.


இறுதியாக, தரம் குறைந்த படைப்புகளை புறக்கணிப்பதன் மூலமே அசல் மனித உரையாடல்களையும் ஆழமான சிந்தனைகளையும் நம்மால் காப்பாற்ற முடியும் என்று கர்பதி நம்புகிறார். இயந்திரங்கள் உருவாக்கும் குப்பைகளில் மனிதனின் படைப்பாற்றலும், தனித்துவமான கருத்துகளும் மறைந்துவிடக் கூடாது என்பதே அவரது முக்கிய கவலையாக உள்ளது. தரமான படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு தரும்போது, தானாகவே இத்தகைய AI குப்பைகள் சந்தையில் இருந்து மறைந்துவிடும். எனவே, தொழில்நுட்பத்தின் பின்னால் கண்மூடித்தனமாக செல்லாமல், விவேகத்துடன் தகவல்களை தேர்ந்தெடுப்பதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.


கோடு போட்டால் ரோடு போட்டுவிடும்.. புள்ளி வைத்தால் கோலம் போட்டுவிடும்.. Software Developersகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்த GitHub Copilot..!