AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பிரமிக்க வைக்கும் வகையில் உயர்ந்து வரும் அதே வேளையில், அதன் பக்கவிளைவுகள் இப்போது மென்பொருள் துறையையே அச்சுறுத்த தொடங்கியுள்ளன. இதுவரை AI என்பது மனிதர்களுக்கும் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், Anthropic நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம், மென்பொருள் சந்தையையே ஆட்டம் காண வைத்துள்ளது. SaaSpocalypse என்று அழைக்கப்படும் இந்த புதிய மாற்றம், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Anthropic நிறுவனம் தனது Claude Cowork உதவியாளருக்காக 11 புதிய Pluginகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதனை பயன்படுத்துவதற்கு எவ்விதமான Coding அறிவும் தேவையில்லை. கோடிங் தேவையில்லாத இந்த ஏஜென்ட் கருவி மூலம் சட்டம், விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் Data Analysis போன்ற பணிகளை தானாகவே செய்து முடிக்க முடியும். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, பாரம்பரிய மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் சர்வதேச சந்தையில் மிக மோசமான சரிவை சந்தித்தன.
இந்தத் தொழில்நுட்ப புரட்சியால் உலகளாவிய ஐடி நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 285 பில்லியன் டாலர் வரை நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான்களான Infosys மற்றும் Wipro போன்ற நிறுவனங்களின் பங்குகள் அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்தன. அதேபோல், அக்சென்ச்சர் மற்றும் காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகளும் 10 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. இது ஐடி துறையின் எதிர்காலம் குறித்த கவலையை முதலீட்டாளர்கள் மத்தியில் விதைத்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான சேல்ஸ்ஃபோர்ஸ், அடோப் மற்றும் லீகல் ஜூம் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் இந்த அறிவிப்பால் நிலைகுலைந்துள்ளன. இதற்கு முன்பு வரை, இத்தகைய நிறுவனங்களின் சாப்ட்வேர் தளங்கள் மூலமாகவே பல அலுவலக பணிகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், Anthropic நிறுவனத்தின் ‘கிளாட் லீகல் ஏஜென்ட்’, எந்தவொரு மென்பொருள் உதவியும் இன்றி மனிதர்களை போலவே சட்ட ஆவணங்களை ஆய்வு செய்தல் மற்றும் வரைவுகளை உருவாக்குதல் போன்ற பணிகளை நேரடியாக செய்கிறது. இது பாரம்பரிய மென்பொருள் சேவைகளின் தேவையை முற்றிலுமாக இல்லாது ஆக்கிவிடும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
முன்பு AI என்பது சாப்ட்வேர்களுக்கு ஒரு கூடுதல் வசதியாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது AI ஒரு முழுமையான மென்பொருளாக மாறி, ஏற்கனவே உள்ள பல சாப்ட்வேர்களை தேவையில்லாமல் செய்து வருகிறது. இந்த Agentic AI என்ற புதிய வகை வளர்ச்சி, சாப்ட்வேர் துறையை தடம் தெரியாமல் அழித்துவிடுமோ என்ற அச்சத்தை மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் நிறுவன அதிபர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்கள் ஒரே நாளில் ஆட்டம் கண்டிருப்பது டெக்னாலஜி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
எதிர்காலத்தில் மென்பொருள் துறையின் நிலை என்னவாகும் என்பது குறித்து இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன. “சாஸ்போகாலிப்ஸ்” என்பது ஒரு தற்காலிக அதிர்ச்சியா அல்லது சாப்ட்வேர் நிறுவனங்களின் நிரந்தர வீழ்ச்சியா என்பது போகப் போகத்தான் தெரியும். எனினும், இந்த தொழில்நுட்பத்தின் நிறை குறைகளை உலகம் முழுமையாக புரிந்து கொள்ளும்போதுதான், சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய வழிகளை கண்டறியும். அதுவரை பங்குச்சந்தையிலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் இந்த திக் திக் நிமிடங்கள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
