Sudowrite AI: ஒரு நாவல் எழுத மாதக்கணக்கில் டைம் தேவையில்லை.. Sudowrite ஒரே நாளில் ஒரு நாவலை முடித்துவிடும்.. AI ஆச்சரியங்கள்..!

Sudowrite

AI தொழில்நுட்பம் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் AI இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் AI, தற்போது படைப்பாற்றல் மிக்க எழுத்துத் துறையிலும் தடம் பதித்துள்ளது. இதுவரை மின்னஞ்சல் எழுதவும், கட்டுரைகளை சுருக்கவும் மட்டுமே AI பயன்பட்டு வந்த நிலையில், இப்போது நாவல் ஆசிரியர்களுக்கும் கதை எழுத்தாளர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது.


எழுத்தாளர்களுக்கான பிரத்யேகத் தளம்: Sudowrite


பொதுவான AI கருவிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது Sudowrite. இது சிறுகதைகள், தொடர்கதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதற்காகவே ஆக்கப்பூர்வமாக உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். ஒரு கதையின் ஆரம்ப கருவில் தொடங்கி, அதன் கிளைக்கதைகள், கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் என ஒரு முழு நாவலையும் எழுதி முடிக்க இது உதவுகிறது. ஒரு எழுத்தாளரின் கற்பனை திறனுக்கு தொழில்நுட்ப ரீதியாக உயிர் கொடுக்கும் ஒரு களமாக இது செயல்படுகிறது.


எளிமையான எடிட்டிங் மற்றும் காட்சி விரிவாக்கம்


Sudowrite தளத்தின் எடிட்டிங் மிகவும் எளிமையானது. நீங்கள் எழுதிய ஒரு பத்தியை தேர்வு செய்து, அதை இன்னும் விவரிப்பாக மாற்றவோ அல்லது அதில் உணர்ச்சிகளை சேர்க்கவோ கட்டளையிட்டால், அது நொடி பொழுதில் செய்து முடிக்கும். கதையின் ஓட்டத்தை துல்லியமாக புரிந்துகொள்ளும் இந்த Sudowrite அடுத்தடுத்த காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் அழகாக விரிவுபடுத்தும். எழுத்தாளரின் பாணியிலேயே கதையை தொடர்ந்து கொண்டு செல்வது இதன் தனிச்சிறப்பாகும்.


ஸ்டோரி பைபிள்: ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் அம்சம்


ஒரு நாவலை எழுதும்போது கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் இடங்களை நினைவில் கொள்வது கடினம். ஆனால், Sudowrite இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு கதையை நகர்த்தும். குறிப்பாக, ‘ஸ்டோரி பைபிள்’ என்ற அம்சம், முதல் பாகத்தில் சொல்லப்பட்ட தகவல்கள் இரண்டாம் பாகத்தில் மாறாமல் இருப்பதை உறுதி செய்யும். கதையின் ஒருமைப்பாடு சிதையாமல் இருக்க இது பெரும் உதவியாக இருக்கிறது.


யாருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?


முழு நாவலையும் எழுதி முடிக்க ஏஐ-யின் உதவி தேவைப்படுபவர்களுக்கும், விரிவான உலக கட்டமைப்பை உருவாக்குபவர்களுக்கும் இந்த தளம் மிக சிறந்தது. இலக்கிய தரம் வாய்ந்த உரைநடைகளை உருவாக்குவதில் இது அத்துபடி. அதே நேரத்தில், சாதாரண மின்னஞ்சல்கள் எழுதுபவர்களுக்கும், மிக எளிமையான அமைப்புகளை விரும்புபவர்களுக்கும் இது தேவைப்படாது. மேலும், இது டெஸ்க்டாப் பிரவுசரில் மட்டுமே இயங்கும் என்பதால், மொபைல் செயலியை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கலாம்.


கட்டண விவரங்கள் மற்றும் நவீன வரப்பிரசாதம்


Sudowrite கருவியை சில நாட்கள் மட்டும் இலவசமாக சோதித்து பார்க்கலாம். அதன் பிறகு, மாதம் சுமார் 1,600 ரூபாய் முதல் கட்டணம் செலுத்தி பயன்படுத்தினால், வரம்பற்ற திட்டங்கள் மற்றும் ‘ஸ்டோரி பைபிள்’ போன்ற உயர்ரக வசதிகள் கிடைக்கும். ஒரு எழுத்தாளரை போலவே சிந்திக்கவும், கதையை செதுக்கவும் உதவும் இந்த சுடோரைட், நவீன கால தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு புதிய திசையை காட்டும் என்பதில் ஐயமில்லை.


Descript AI : வீடியோ “எடிட்டிங் தெரியாதவங்க கூட இங்க எடிட்டர் ஆகலாம்… ஏன்னா இது Descript AI டூ. உங்க வீடியோவோட கெத்தை ஏத்தும்!