AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது மனிதர்கள் நினைத்ததை விட பல மடங்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு புதிய AI டூல்ஸ்களும் மனிதர்களின் வேலையை குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி, செலவையும் குறைக்கிறது என்றால் அது மிகையில்லை. அந்த வகையில், ஆன்லைன் மீட்டிங்குகள் மற்றும் அலுவலக கூட்டங்கள் நடக்கும்போது ஒரு தனிப்பட்ட உதவியாளர் போல செயல்படும் Fathom AI ஒரு அற்புதமான கருவியாக உருவெடுத்துள்ளது.
மீட்டிங் குறிப்புகளுக்கு இனி கவலையில்லை
இன்றைய கார்ப்பரேட் உலகில் மீட்டிங்குகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பல நேரங்களில் மீட்டிங்கில் கலந்து கொள்வதை விட, அதில் பேசப்படும் விவரங்களை துல்லியமாக குறிப்பெடுப்பது அனைவருக்கும் ஒரு சவாலான பணியாக உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்கவே Fathom AI உதவுகிறது. இது நீங்கள் மீட்டிங்கில் பேசிக்கொண்டிருக்கும்போதே உங்கள் சார்பாக குறிப்புகளை எடுத்து, முக்கியமான முடிவுகளை தொகுத்து சில நொடிகளில் வழங்கிவிடும்.
மின்னல் வேக அறிக்கையும் ஆக்ஷன் ஐட்டமும்
மீட்டிங் முடிந்த சில நொடிகளிலேயே அதில் பேசப்பட்ட முக்கியமான தகவல்கள் என்னென்ன என்பதை ஒரு சுருக்கமான அறிக்கையாக Fathom AI வழங்குகிறது. அதுமட்டுமின்றி, மீட்டிங்கின் முடிவில் யார் யார் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும் என்ற Action Items பட்டியலையும் இது தானாகவே தயார் செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும். இதனால் மீட்டிங்கிற்கு பிறகு செய்ய வேண்டிய வேலைகளுக்கான திட்டமிடல் மிக எளிதாகிறது.
30 மொழிகள் மற்றும் ஸ்லாங்
தமிழ் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், பல்வேறு வகையான ஸ்லாங் மற்றும் உச்சரிப்புகளையும் புரிந்து கொள்ளும் தன்மை உடையது. உங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பிரத்யேக சுருக்க பெயர்களை கூட இதற்கு தனிப்பட்ட முறையில் பழக்கப்படுத்தினால், அதையும் இது சரியாக உள்வாங்கி கொள்கிறது. ஜூம், கூகுள் மீட் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் ஆகிய முன்னணி தளங்களுடன் இது தடையின்றி இணைந்து செயல்படும்.
சிஆர்எம் ஒருங்கிணைப்பு மற்றும் மேஜிக் தேடல்
Fathom AI மூலம் எடுக்கப்படும் குறிப்புகளை HubSpot மற்றும் Salesforce போன்ற சிஆர்எம் கருவிகளுடன் நேரடியாக இணைத்து கொள்ளலாம். இதன் மூலம் ஒரே தரவை மீண்டும் மீண்டும் டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், மீட்டிங் முடிந்து பல நாட்களுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் என்ன பேசினார் என்று நீங்கள் கேள்வி கேட்டால், ஆயிரக்கணக்கான வரிகளில் இருந்து துல்லியமான பதிலை இது மேஜிக் போல தேடித் தந்துவிடும்.
நிபுணர்களின் நம்பிக்கை மற்றும் இலவச வசதிகள்
உலகம் முழுவதிலும் உள்ள விற்பனை பிரதிநிதிகள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சிடிஓ-க்கள் என பலரும் இந்த AI கருவியை பயன்படுத்தி வருகின்றனர். இனிமேல் இந்த AI இல்லாமல் வேலை செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு இது ஒரு பக்கபலமாக இருக்கிறது. இதன் அடிப்படை வசதிகள் இலவசமாக கிடைத்தாலும், இன்னும் கூடுதல் சிறப்பம்சங்களை பெற விரும்புவோர் சந்தா கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
