மாணவர்களே.. உங்களுக்கு புரியாத கேள்வி இருந்தா போட்டோ எடுங்க… பதிலை மட்டும் இல்ல, அந்த பாடத்தோட மொத்த வித்தையையும் AI நிறுத்தும்!

 

Wolfram

பள்ளியில் மாணவர்கள் படிக்கும் பாடங்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராமல் இருப்பதையும், கஷ்டப்பட்டு படித்த கணித சூத்திரங்களை எங்கே, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமலேயே பலரது கல்விப்பயணம் முடிந்து விடுவதையும் நாம் காண்கிறோம். ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் பாடப்புத்தகங்களைத் தாண்டி AI கருவிகள் மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வழிகாட்டியாக உருவெடுத்துள்ளன. பள்ளியில் படிக்கும்போதே கடினமான கணக்குகள் மற்றும் அறிவியல் பாடங்களை விளையாட்டு போல எளிமையாக கற்க பல AI தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன. அவற்றில் Wolfram Alpha மற்றும் Socratic ஆகியவை இன்றைய மாணவர்களிடையே மிகவும் முன்னணியில் உள்ளன.


Wolfram Alpha என்பது பார்ப்பதற்கு ஒரு Search Engine போலத் தெரிந்தாலும், அது உண்மையில் தகவல்களை தேடித்தருவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஒரு ‘கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இன்ஜின்’ ஆக செயல்படுகிறது. அதாவது, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தில் உள்ள தகவல்களை அப்படியே தராமல், அந்த தகவல்களை தானாகவே கணக்கிட்டு துல்லியமான பதிலை வழங்குகிறது. குறிப்பாக அல்ஜீப்ரா, கால்குலஸ் போன்ற மிகவும் சிக்கலான கணித சமன்பாடுகளுக்கும் இது நொடியில் விடை தந்துவிடும் ஆற்றல் கொண்டது. இது மாணவர்களின் தர்க்கரீதியான அறிவை வளர்ப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.


இந்த கருவியின் சிறப்பம்சமே, இது வெறும் விடையை மட்டும் தராமல், அந்த விடை எப்படி வந்தது என்பதற்கான Step-by-Step விளக்கத்தையும் விரிவாக தருவதுதான். அதுமட்டுமின்றி, மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்கும் அந்த சூத்திரம் எதிர்கால வாழ்க்கையில் எதற்காக பயன்படும் மற்றும் எந்த துறைக்கு உதவும் என்பது போன்ற ஆழமான புள்ளிவிவரங்களையும் இது வழங்குகிறது. வேதியியல் வாய்ப்பாடுகள், இயற்பியல் விதிகள் ஆகியவற்றையும் நுணுக்கமாக பகுப்பாய்வு செய்து தரும் வல்லமை இதற்கு இருப்பதால், மாணவர்கள் பாடங்களின் வேர் வரை சென்று புரிந்துகொள்ள முடிகிறது.


Socratic என்பதும் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய ஒரு ஏஐ கருவியாகும். இது மாணவர்களின் வீட்டுப்பாட சுமைகளைக் குறைப்பதோடு, அவர்களின் சந்தேகங்களை ஒரு ஆசிரியரை போல எளிமையாக புரிந்துகொண்டு விளக்குகிறது. உங்களுக்கு புரியாத ஒரு கேள்வியை புகைப்படம் எடுத்து இந்த கருவியிடம் கேட்டால், உடனே அதற்குரிய விளக்கங்கள், தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களை திரையில் காட்டும். இது மாணவர்கள் தாமாகவே கற்றல் முறையில் சிறந்து விளங்க உதவுகிறது.


Socratic கருவியில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை; மாணவர்கள் தங்கள் குரல் மூலமாகவே கேள்விகளை கேட்கும் வசதி உள்ளது. கணிதம் மட்டுமல்லாமல் உயிரியல், வரலாறு, ஆங்கிலம், இலக்கியம் மற்றும் பிற வட்டார மொழி பாடங்களுக்கும் இது சிறந்த தீர்வுகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த இரண்டு கருவிகளுக்கும் இடையே ஒரு நுட்பமான வேறுபாடு உள்ளது. Wolfram Alpha என்பது ஒரு அதிநவீனக் கால்குலேட்டர் போன்றது; இது தரவுகளை கணக்கிட்டு நேரடி முடிவுகளை தரும். ஆனால், Socratic என்பது ஒரு சிறந்த ஆசிரியரை போன்றது; இது ஒரு கேள்விக்கான சிறந்த விளக்கம் இணையத்தில் எங்குள்ளது என்பதை தேடி கண்டுபிடித்து மாணவர்களுக்கு வழங்குகிறது.


இத்தகைய ஏஐ கருவிகள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, கல்வியை சுமையற்ற ஒன்றாக மாற்றுகின்றன. மாணவர்கள் பாடங்களை வெறும் மனப்பாடம் செய்யாமல், அவற்றின் நடைமுறை பயன்பாடுகளை புரிந்துகொண்டு படிக்க இத்தொழில்நுட்பங்கள் தூண்டுகோலாக அமைகின்றன. 2026-ன் நவீன கல்வி சூழலில், இது போன்ற இன்னும் பல ஏஐ கருவிகள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாகி வருகின்றன. அவற்றை பற்றி வரும் நாட்களில் ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம். மொத்தத்தில், இத்தொழில்நுட்பங்கள் மாணவர்களின் கல்வி பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன.


GPT-5.2: இந்த மாதம் வெளியான GPT-5.2.. மனுஷன் யோசிக்கிற நேரத்துல, இது வேலையையே முடிச்சிருக்கும்!