AI School: ஒரு மனித ஆசிரியர் கூட கிடையாது.. முழுக்க முழுக்க AI ஆசிரியர்களால் இயங்கப்போகும் பள்ளி.. கட்டணம் ஆண்டுக்கு ரூ.46 லட்சம்.

AI School

ஆசிரியர்களே இல்லாத, முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு புதிய பள்ளிக்கூடம் சிகாகோவில் திறக்கப்பட உள்ளது. 

கல்வித்துறையில் இது ஒரு மிகப்பெரிய புரட்சியாக கருதப்பட்டாலும், அதே சமயம் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. 'ஆல்பா ஸ்கூல்ஸ்' என்ற இந்த தனியார் கல்வி நிறுவனம், மனித ஆசிரியர்களுக்கு பதிலாக AI-மூலம் பாடங்களை கற்பிக்க திட்டமிட்டுள்ளது.

ஆல்பா ஸ்கூல்ஸ்: இது எப்படி செயல்படுகிறது?

இந்த ஆண்டு திறக்கப்பட உள்ள இந்த AI பள்ளியில் மழலையர் பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 100 மாணவர்கள் பயில்வார்கள். இந்த பள்ளியின் ஆண்டுக்கட்டணம் சுமார் இந்திய மதிப்பில் சுமார் 46 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த பள்ளியின் சிறப்பம்சமே இரண்டு மணி நேர வகுப்புகள் மட்டுமே.  மாணவர்கள் தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே AI மூலம் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற முக்கிய பாடங்களை கற்கிறார்கள். இதில் மாணவர்கள் ஒரு பாடத்தில் முழு திறமையை வெளிப்படுத்திய பிறகே அடுத்த பாடத்திற்கு செல்ல முடியும்.

மீதமுள்ள நேரங்களில் மாணவர்கள் Projects, பொதுப்பேச்சு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி போன்ற வாழ்க்கை திறன்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆசிரியர்களுக்கு பதில் 'வழிகாட்டிகள்'

இந்த பள்ளியில் சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பதில் 'வழிகாட்டிகள்' மட்டுமே இருப்பார்கள். இவர்களின் பணி மாணவர்களை உற்சாகப்படுத்துவதும், அவர்களுக்கு தேவையான மன ரீதியான ஆதரவை வழங்குவதும் மட்டுமே. பாடங்களில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், தொலைதூரத்தில் இருக்கும் நிபுணர்கள் இணையவழியில் உதவி செய்வார்கள்.

எழுந்துள்ள அச்சங்களும் சவால்களும்

இந்த நவீன கல்வி முறையில் பல நன்மைகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், கல்வியாளர்கள் சில முக்கிய கவலைகளை முன்வைக்கின்றனர்.  ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் பாடங்களை நடத்துபவர்கள் மட்டுமல்ல; மாணவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு வழிகாட்டுபவர்கள். AI-ஆல் ஒரு ஆசிரியரின் இடத்தை பூர்த்தி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே.

மாணவர்களின் கண் அசைவுகள், விசைப்பலகை இயக்கம் மற்றும் பதிலளிக்கும் வேகம் போன்ற அனைத்தும் இந்த பள்ளியில் கண்காணிக்கப்படுகின்றன. இது மாணவர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மிக அதிக கட்டணம் வசூலிப்பதால், இது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமேயான கல்வியாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

AI மூலம் குறுகிய காலத்தில் நல்ல முடிவுகள் கிடைத்தாலும், நீண்ட கால அடிப்படையில் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் சமூக வளர்ச்சியில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

கல்வித்துறையில் தொழில்நுட்பத்தின் ஊடுருவல் தவிர்க்க முடியாதது என்றாலும், மனித உணர்வுகளும் இயந்திரத்தின் வேகமும் எவ்வாறு சமநிலைப்படுத்தப்பட போகிறது என்பதை பொறுத்தே இத்தகைய பள்ளிகளின் எதிர்காலம் அமையும்.

Texta AI: கூகுள்ல தேடுனா நீங்க முன்னாடி வரலாம்... ஆனா AI-கிட்ட கேட்டா உங்க பேருதான் முதல்ல வரணும், அதுக்குத்தான் இந்த Texta!மார்க்கெட்டிங் உலகத்துல இது புது ரூட்டு... AI விசிபிலிட்டில நாமதான் இனி ஹெட் அவுட்டு!