அமேசான் நிறுவனத்தின் Alexa பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆரம்பத்தில் வெறும் குரல் வழி இயங்கும் ஒரு ஸ்பீக்கராக மட்டுமே அறியப்பட்ட நிலையில், இப்போது Generative AI தொழில்நுட்பத்துடன் Alexa+ என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இது வெறும் கட்டளைகளை நிறைவேற்றும் கருவி மட்டுமல்ல, உங்களுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து ஒரு மனிதர் பேசுவது போன்ற உணர்வை வழங்குகிறது. நீங்கள் ஒரு கேள்வியை முழுமையாக கேட்கவில்லை என்றாலும், உங்கள் சூழலை உணர்ந்து நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பதை புரிந்துகொண்டு பதில் சொல்லும் புத்திசாலித்தனம் இதற்கு உண்டு.
Alexa+ உங்கள் தனிப்பட்ட ரசனைகளையும், குடும்ப உறுப்பினர்களின் முக்கியமான நாட்களையும் அதாவது பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்டவற்றாஇ நினைவில் வைத்து சரியான நேரத்தில் நினைவுபடுத்தும். “வர்ற திங்கட்கிழமை ஒரு பிளம்பரை வர சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணு” என்று சொன்னால் போதும், அதுவே தேடி பார்த்து ஒரு நல்ல பிளம்பரை முன்பதிவு செய்துவிடும். நீங்கள் சாலையில் செல்லும்போது பார்க்கும் ஒரு துண்டுப் பிரசுரம் அல்லது விளம்பரம் புரியவில்லை என்றால், அதை புகைப்படம் எடுத்து அப்லோடு செய்தாலே போதும்; அதிலுள்ள தகவல்களை அழகாக பட்டியலிட்டு காட்டிவிடும்.
ஸ்மார்ட் ஹோம் கருவிகளை பயன்படுத்துபவர்களுக்கு Alexa+ ஒரு வரப்பிரசாதம். தேவையில்லாத நேரத்தில் விளக்குகளை அணைப்பது, அறையில் ஆள் இல்லையென்றால் ஏசியை நிறுத்துவது என மின்சாரத்தை சேமிக்க உதவும். அதுமட்டுமின்றி, உங்கள் வீட்டு சிசிடிவி கேமராக்களை அவ்வப்போது ஆய்வு செய்து, ஏதேனும் அசம்பாவிதம் அல்லது முக்கியமான தகவல் இருந்தால் உடனுக்குடன் உங்கள் மொபைலுக்கு அனுப்பிவிடும். இது உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு டிஜிட்டல் காவலாளியாகவும் செயல்படுகிறது.
அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த அலெக்சா பிளஸ் சேவை முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் அமேசான் பிரைம் மெம்பராக இல்லை என்றால், இந்த சேவையைப் பயன்படுத்த மாதம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,650 சந்தா கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இருப்பினும், Alexa+ முழுக்க முழுக்க வீடு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறையை மேம்படுத்தவே உருவாக்கப்பட்டுள்ளது. “வீட்டு வேலையை ஈஸியாக்க இது உதவும், ஆனா பிசினஸ் அல்லது தொழில் ரீதியான வேலைகளுக்கு இது அந்த அளவுக்கு செட் ஆகாது” என்பதைப் பயனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தொழில்நுட்பம் வளர வளர, நமது வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, நம்மை புரிந்து பேசும் ஒரு நண்பனாக Alexa+ மாறியிருப்பது ஆச்சரியமான விஷயம். “கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஒரு ஆள் இல்லைனாலும், Alexa+ கண்டிப்பா இருக்கும்!
